நில மசோதாவை முன்பு எதிர்த்த ஜெயலலிதா இப்போது ஆதரிப்பது சுயநலம்: கருணாநிதி
சென்னை: நிலம் கையப்படுத்தும் மசோதாவை ஜெயலலிதா ஆதரிப்பது சுயலாபத்துக்காகத்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் எழுச்சியை கண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவு, அடக்கம் பெற வேண்டும் எனவும் கருணாநிதி கூறியுள்ளார். இந்த புரட்சியை அடக்க எந்த ஆயுதம் பயன்படுத்தினாலும் எழுச்சி அடங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், தமிழக வேளாண்மை அதிகாரி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.
மத்திய அரசே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பபெறு. தமிழக அரசே வேளாண்மை அதிகாரி தற்கொலை சம்பவத்தில் நீதியை நிலைநாட்டு, என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பட்டன.

மக்கள் எழுச்சி
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்தியஅரசை எச்சரிக்கும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். மக்களின் எழுச்சியை கண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவு, அடக்கம் பெற வேண்டும் என்று கூறிய கருணாநிதி, திமுக மட்டும் அல்ல எல்லா கட்சிகளும் அராஜகத்தை கண்டு கொதித்து போய் உள்ளன. சமுக சேவகர் அன்னா ஹசாரே உள்ளிட்டோரும் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர் என்றார்.

கருணாநிதி குற்றச்சாட்டு
நில மசோதாவை இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன. நியாயமான வாதங்களை ஒதுக்கிவிட்டு இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலை மறைத்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தால் சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ஜெயலலிதா என கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு சுயலாபம்
2 ஆண்டுக்கு முன்பு எதிர்த்த ஜெயலலிதா தற்போது மசோதாவை ஆதரித்தது சுயலாபத்துக்கே என கருணாநிதி தெரிவித்தார். சுயலாபத்துக்காக ஆதரவு அளித்ததை மறுக்க முடியுமா என கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

மக்கள் புரட்சி
நில மசோதாவை எதிர்த்து சிறைக்கு செல்ல தமிழர்கள் தயாராகி விட்டார்கள் என்றும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் முடிவுகட்டி புறப்பட்டுவிட்டால் யாராலும் தடுக்க முடியாது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த புரட்சியை அடக்க எந்த ஆயுதம் பயன்படுத்தினாலும் எழுச்சி அடங்காது என ஆர்பாட்டத்தில் பேசிய கருணாநிதி தெரிவித்தார்

ஸ்டாலின் ஆர்பாட்டம்
மத்திய அரசின் நிலம் கையகபடுத்தும் மசோதாவுக்கு எதிராக திருவாரூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், நிலம் கையகபடுத்தும் மசோதா மிகவும் ஆபத்தானது என குற்றம் சாட்டினார். மசோதாவை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடியது எனவும், கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் முந்தைய அரசு 2013ஆம் ஆண்டு நில மசோதா நிறைவேற்றியது.

செல்வந்தர்களுக்கு சாதகம்
ஐ.மு.கூட்டணி அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலாசனை நடத்தி மசோதாவை நிறைவேற்றியது. நில உரிமையாளர்களின் 80 சதவிகித ஒப்புதலை பெற வேண்டும் என்ற பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆனால் மோடி அரசோ செல்வந்தர்களுக்கு சாதகமான மசோதாவை நிறைவேற்றியுள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆதரவு ஏன்
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், விவசாயிகளுக்கு எதிரான மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது வெட்கக்கேடானது என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் எதிர்ப்பு
நிலம் எடுப்பு மசோதாவுக்கு அதிமுகவின் 37 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசின் நில மசோதாவுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி ஜெயலலிதாவை ஜேட்லி சந்தித்தன் மர்மத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

திருச்சியில் ஆர்பாட்டம்
திருச்சியில் கே.என் நேரு தலைமையில் திமுக-வினர் 2 ஆயிரம் பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக-வினர் 500 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூவர் ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக-வினர் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications