தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்... அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டிருந்த கருத்தால் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் வேலூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சூர்ய பிரகாஷ் தன்னுடைய பொதுநல மனுவில் கோரி இருந்தார். தமிழகத்தில் நிலவும் பதற்றமான சூழலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், இத்தகைய கருத்தை கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரி இருந்தார்.
இந்த அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். சட்டத்தை மீறி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications