ஒரு பக்கம் மருத்துவமனைகள், மறுபக்கம் மது கடை.. திண்டுக்கல் டாஸ்மாக் கடையை மூட கெடு விதித்த ஐகோர்ட்
மதுரை: திண்டுக்கல்லில் டாஸ்மாக் மதுக்கடையை 2 வாரத்தில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கலைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் - திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோருக்கு, மது அருந்துவோரால் இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்தக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இரு வெவ்வேறு பள்ளிகள் 30 மற்றும் 50 மீட்டரில் அமைந்துள்ளன. வழிபாட்டுத் தலம் குறுகிய துாரத்திலும், அரசு மருத்துவமனை 100 மீட்டரிலும் அமைந்துள்ளதாக மனுதாரர் கூறுவது தவறானது. மேலும் பள்ளி, வழிபாட்டுத்தலம், மருத்துவமனையிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் டாஸ்மாக் இருக்க வேண்டும் என்ற துார கட்டுப்பாடு விதிமுறை இப்பகுதிக்கு பொருந்தாது" என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், சில சூழ்நிலைகளில் துார அளவுகோலை கடைப்பிடிப்பது சரியானதல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஒரு டாஸ்மாக் கடை வாயிலாக, அப்பகுதியில் சாலையை பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக பள்ளி நேரங்களில் குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
அரசு தன் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வது மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை முதன்மை கடமைகளாக கருத வேண்டும். மக்கள் நல அரசு, பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் பாடுபட வேண்டும். சிகிச்சை தவிர போதைப்பொருள் கலந்த பானங்கள் மற்றும் சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் போதை மருந்துகளின் நுகர்வைத் தடை செய்ய மாநில அரசு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் நல அரசு, ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது. பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இரண்டு வாரங்களில் மூட வேண்டும்." என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications