பங்காரு அடிகளார் மறைவையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, நாளை மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ள செய்தி, அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டுக்கு மேல் சிறப்பாக நடத்தி கல்வி, மருத்துவ சேவைகளை வழங்கியவர். ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறையைப் பழக்கப்படுத்தினார். பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 20ஆம் தேதி) செங்கல்பட்டு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இறுதிச் சடங்கின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications