நடுரோட்டில் நடந்த நடிகர் ஜீவா படத்தின் ஷூட்டிங் – ஆம்புலன்சிற்கு வழிவிடாததால் இளைஞர் பலி
திருச்சி: திருச்சியில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நடுரோட்டில் நடைபெற்றபோது ஆம்புலன்ஸிற்கு படக்குழு வழிவிடாத காரணத்தினால் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

முத்தாண்டிபட்டி பிரிவு ரோட்டில் கார்த்திக் சென்ற போது அவர் மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதே நேரத்தில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி பாலத்தில் நடிகர் ஜீவா-நயன்தாரா நடித்துவரும் "திருநாள்" என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இதனால் சாலையில் இரு புறமும் வாகனங்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தன. பாலத்தின் கீழ் புறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் வேறு வழியாக தஞ்சை மருத்துவமனைக்கு சென்றுள்ளது. அதற்குள் விபத்தில் சிக்கிய வாலிபர் கார்த்திக் இறந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்று படப்பிடிப்பு குழுவினரின் ஆட்டோ ஒன்றின் சாவியை பறித்துள்ளனர். மேலும் இந்த தகவலை வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் இவ்வாறு படப்பிடிப்பு நடத்தும் போது தடையின்றி வாகனங்கள் செல்ல போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications