சேலம் சிறைக்குள் நடந்த துன்புறுத்தல்கள்.. வரிக்கு வரி விவரித்த பியூஷ் மனுஷ்.. பேட்டி முழு விவரம்!
சேலம்: சேலம் சிறைச்சாலைக்குள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டேன் என்று சமூக சேவகர் பியூஷ் மனுஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சேலத்தில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி, பியூஷ் மனுஷ் மற்றும் அவருக்கு நெருக்கமான கார்த்திக் மற்றும் முத்து செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சேலம் நீதிமன்றம், பியூஷுக்கு நேற்றுமுன்தினம் ஜாமீன் வழங்கியது. நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இரவில் சேலம் பிரஸ் கிளப்பில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார் பியூஷ் மனுஷ். அவர் கூறியதாவது:

தேசிய கொடியை எரித்தேனா?
கைது செய்ததும், தனியாக ஒரு பிளாக்கில் எங்களை அடைத்து வைத்தனர். தண்ணீர் கொடுத்தனர். ஃபேன் போட்டனர். ஆனால், மறுநாள் காலையில், வருவோர், செல்வோர் (போலீஸ் கான்ஸ்டபிள்கள்) எல்லோரும், தேசிய கொடிய எரிச்சிட்டு ஜெயிக்கு வந்திருக்க.. நீ எந்த நாட்டுக்காரன் என்று கேட்டு அடிக்க ஆரம்பித்தனர். காலை 6 மணி முதல் 8 மணிவரை இப்படியாக போலீசார் தொடர்ந்து அடித்தனர். நான் கொடியை எரிக்கவில்லை என கூறியதை அவர்கள் கேட்கவில்லை.

காப்பாற்றிய செய்தித்தாள்கள்
காலை 8 மணிக்கு சிறைச்சாலைக்குள், செய்தித்தாள்கள் வந்தன. செய்தித்தாளை பார்த்த பிறகுதான் நிலைமை மாறியது. ஏனெனில் செய்தித்தாளில் என்னை கைது செய்ய காரணம், பாலம் கட்டுவதற்கு எதிராக போராடியதுதான் என்று கூறப்பட்டிருந்தது. அனைத்து ஊடகங்களிலும் அதேபோலத்தான் செய்தி சொன்னார்கள்.

மீடியாக்களுக்கு நன்றி
அதன்பிறகுதான் சிறை அதிகாரிகள், இவர் தேசிய கொடியை எரிக்கவில்லையாம்.. ஏதோ சமூக சேவகராம் என தங்களுக்குள் பேசிக்கொண்டு அடிப்பதை நிறுத்தினர். தக்க நேரத்தில் உண்மை செய்தியை வெளியிட்ட மீடியாக்களுக்கு நன்றி.

தெரியாமல் அடித்ததாக கூறினர்
இதன்பிறகு என்னை சிறையிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அடித்தார்களா என டாக்டர்கள் கேட்டனர். போலீசார், அருகேயே நின்று கொண்டிருந்ததால், நான் அடிக்கவில்லை என்று கூறிவிட்டேன். திங்கள்கிழமை, முதல், 'ஓவர் ஆல் கன்ட்ரோல் டீம்' போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது என்னை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். தேசிய கொடியை எரித்துவிட்டதாக நாங்கள் அடித்துவிட்டோம். நீங்கள் ஏதோ சமூக ஆர்வலராம்.. எங்களுக்கு தெரியாது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னிப்பு கடிதம்
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை, நான் எஸ்பி மற்றும் சிறை சூப்பிரடெண்டுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தேன். பேஸ்புக்கில் நான் எப்போதுமே ஆக்ரோஷமாக கருத்து கூறிவந்துள்ளேன். சம்மந்தப்பட்டவர்கள் பெயரை குறிப்பிட்டு தாறுமாறாக விமர்சித்தேன். இதை தப்பு என உணர்ந்ததால், அதற்காக அந்த மன்னிப்பு கடிதத்தை கொடுத்தேன்.

நல்லாயிருக்கியா
இதன்பிறகு, செவ்வாய்க்கிழமை, எஸ்.பி மற்றும் ஜெயில் சூப்பிரடெண்ட் வந்து சிறைக்குள் ஆய்வு நடத்தினர். என்னை பார்த்த சூப்பிரடெண்ட் சிரித்தபடியே 'நல்லாயிருக்கியா..' என்று கேட்டார். நானும் மன்னிப்பு கடிதத்தால் நிலைமை சரியாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டேன்.

காரணமேயின்றி அடித்தனர்
ஆனால், புதன்கிழமை பிளாக் ஆய்வு நடத்த வந்தார் சூப்பிரடெண்ட். வந்த உடனேயே, ஓங்கி என்னை அறைந்தார். "ஏதேதோ பண்ணிகிட்டு இருக்கியாமா.." என்று என்னை பார்த்து கர்ஜித்தார். நான் "சார்.." என்றேன். ஆனால் சூப்பிரடெண்டோ, "என்ன முறைக்கிற..." என்றார். எஸ்பியை நான் முறைக்கிறேன் என நினைத்துக் கொண்ட, அருகில் நின்ற, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, திடீரென எகிறி குதித்து, எனது கன்னத்தில் அடித்தார். அந்த அடி காரணமாக, எனது காதில் ஒரு மாதிரியான சத்தம் வந்துவிட்டது.

பெட்ஷீட்டையும் பறித்தனர்
இதனிடையே, என்னுடன் கைது செய்யப்பட்ட கார்த்திக், முத்து செல்வம் இருவரும் ஜாமீனில் வெளியே சென்றனர். அவர்களும் இல்லாமல் நான் தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். இரவு நான் போர்த்திக்கொள்ள பெட்ஷிட் எடுத்து வைத்திருந்தேன். ஆனால், அதை ஜெயிலர் பறித்துக்கொண்டார்.

ஒழித்துவிடுவேன் என மிரட்டல்
இதனிடையே, என்னை அடித்த தகவலை அறிந்து, எனது மனைவி சிறைக்கு வந்து என்னை பார்த்து விவரம் கேட்டார். நானும் அடித்தது உண்மைதான் என்று கூறினேன். அவர் வழக்கறிஞரை பார்த்து விவரத்தை கூறினார். மீடியாக்களுக்கு பேட்டியளித்தார். சிறைக்குள் நான் தாக்கப்பட்ட செய்தி, மீடியாக்களில் வெளியானதும், அதை பார்த்துவிட்டு சூப்பிரடெண்ட் மீண்டும் என்னிடம் வந்தார். "சிறையில் நடந்தது சிறைக்குள்தான் இருக்கனும். வெளியே தகவல் போகக்கூடாது. ஒழிச்சிகட்டிவிடுவேன்" என்றார்.

விளக்கினேன்
"அந்த தகவலை நான் பிரஸ்சுக்கு சொல்லவில்லை சார்.., எனது மனைவி என்னிடம் கேட்டார். நான் அவரிடம் மட்டும்தான் சொன்னேன்" என்று பதில் கூறினேன்.

எத்தனையோ சேவைகள்
போராட்டம் நடத்துவது போன்ற ஒரு 'குற்றத்திற்கு' ஒருவர், தனிமை சிறையில் அடைக்கப்படுவது சேலம் சிறை வரலாற்றில் இதுதான் முதல் முறை என அறிகிறேன். கடந்த 20 வருடமாக சேலத்தில் மரம் நட்டுக்கொண்டுள்ளேன், பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளேன், தண்ணீரை கெடுப்பது., காவிரி மாசு, ஏரி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடித்தான் வருகிறேன். ஆனால், இவ்வளவு அவமானம் எப்போதுமே பட்டதில்லை. இவ்வாறு கலங்கிய குரலுடன் பேட்டியளித்தார் பியூஷ் மனுஷ். பேட்டியின்போது அவரது மனைவியும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications