காயமடைந்த மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவலா?... எல்லையில் தீவிர சோதனை
கோவை: கேரளா அருகே உள்ள உள்ள அம்பலப் பாறா வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் காயமடைந்த மாவோயிஸ்டுகள் தப்பி ஓடினர். இவர்கள் தமிழத்துக்குள் ஊடுருவி இருக்கின்றனரா என எல்லைப் பகுதிகளில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளமாநில எல்லையில் உள்ள பாலக்காடு வனப்பகுதியில் 2 பெண்கள், 2 ஆண்கள் கொண்ட மாவோயிஸ்டுகள் போலீசாருடன் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இவர்கள் போலீசாரை நோக்கி நவீன ஏ.கே.47 ரக துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் 40 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பல மணி நேரம் நீடித்த சண்டையில் மாவோயிஸ்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழக வனப்பகுதிகளில் ஊடுருவி இருக்க வாய்ப்பு உண்டு என்பதால், ஐ.ஜி. சங்கர் உத்தரவின்பேரில் கோவை, நீலகிரி வனப்பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையோர பகுதிகளில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு நடந்து வருகிறது. கோவை மாவட்ட போலீசாருடன் அதிரடிப்படையினரும், வனத்துறையினரும் இணைந்து கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 12 பேர் கொண்ட குழுவினர் கோவை மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மாங்கரை, ஆனைகட்டி, கெத்தை, மஞ்சூர், சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை காரமடையை அடுத்த அத்திக்கடவு வனப்பகுதி, பில்லூர் அணையை ஒட்டிய வனப்பகுதிகள் மற்றும் ஆனைகட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் மற்றும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் நக்சல் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வனப் பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில், போலீசார் தவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக யாரேனும் நடமாடுகிறார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications