“சங்கம் வேணும்”.. நோயாளிகளுக்கு தேவையான முக்கியமான கோரிக்கையாச்சே! கையில் எடுத்த மார்க்சிஸ்ட்
திருப்பூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் குழு வலியுறுத்தி இருக்கிறது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "உடுமலை வட்டம் திருமூர்த்தி மலை, குருமலை பகுதிகளில் அமைந் துள்ள மலைவாழ் மக்களுக்கு உரிய சாலை வசதிகளை அமைத்து தர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை முழுமையான செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நோயாளிகள் நலச் சங்கத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். பல்லடம் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும். பல்லடம் முதல் பூமலூர் வரை போடப்படும் சாலையில் கிடாத்துறையில் பிஏபி பாலத்தை விரிவாக்கம் செய்து சாலை அமைக்க வேண்டும்.
பல்லடம் வட்டம் மாணிக்காபுரம் ஊராட்சி கருப்பண்ணசாமி நகர் பகுதியில் வீட்டுமனை பட்டாவுக்காக விண்ணப்பித்திருக்கிற அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும். காங்கேயம் நெய்க்காரம்பாளையத்தில் ஆதிக்க சாதிகளால் வீடு இடிக்கப்பட்ட குத்தகை விவசாயிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலையில், அரசு சார்பில் வீடு கட்டி தர நட வடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் தக்காளி விதைகள் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு இன்றி அனைத்து பிரிவு மக்களுக்கும், உரிமையும் சம அந்தஸ்தும் வழங்குவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அவ்வப்போது கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்." என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
பொதுவாக தொழிலாளர்கள் சங்கம் இருப்பதைபோன்று, ரயில் பயணிகள் சங்கம் போன்ற வாடிக்கையாளர்கள் சங்கங்கள் உள்ளன. அதேபோல், முக்கியமாக அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளின் பிரச்சனைகள், அவர்களின் தேவைகள், கோரிக்கைகளை எளிதில் வலுவாக முன்வைக்க முடியும்.












Click it and Unblock the Notifications