திருமாவளவனே நேரில் வாங்க.. திடீரென பிடிவாரண்ட்டை ரத்து செய்த மயிலாடுதுறை நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு
மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஆகஸ்ட் 27 ம் தேதி நேரில் ஆஜராக அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராகவும், சிதம்பரம் தொகுதி எம்பியாகவும் இருப்பவர் திருமாவளவன். கடந்த 2003ம் ஆண்டில் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு கட்சியின் தலைவரான திருமாவளவன் தலைமையேற்று இருந்தார். இந்த பேரணியின்போது திடீரென்று கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு என்பது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் திருமாவளவன் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஜூலை 31ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது, அதுதொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த வழக்கு என்பது ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் கைது நடவடிக்கைக்கு ஆளாகலாம் என்பதால் இந்த உத்தரவு என்பது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினமே திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அதேபோல் இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள 3 சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் போராட்டம் நடத்தியதால் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனை ஏற்ற நீதிபதி விஜய குமாரி, திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். மேலும் முக்கிய நிபந்தனை ஒன்றையும் அவர் விதித்தார். அதாவது ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் திருமாவளவன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதன்மூலம் பிடிவாரண்ட் பிரச்சனையில் இருந்து திருமாவளவன் விடுபட்டுள்ள நிலையில் வரும் 27 ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications