குறுவை காய்ந்தது.. சம்பா வெள்ளத்தில் மூழ்கியது.. கண்ணீரில் நாகை மாவட்ட விவசாயிகள்
மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளான மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தற்போது பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
விவசாயிகள்: மழை பெய்யாவிட்டாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு.. மழை அதிகமாக பெய்தாலும் பாதிப்பு. தென் மேற்கு பருவமழை கை கொடுக்காத காரணத்தால் காவிரியில் நீர் வருவது நின்று போனது. கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பல ஏக்கர் குறுவை பயிர்கள் காய்ந்து கருகிப்போனது. சம்பா, தாளடி சாகுபடியாவது கை கொடுக்க வேண்டும் என்று நினைத்த கடைமடை பகுதியான மயிலாடுதுறை, நாகை மாவட்ட விவசாயிகள் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பெய்த மழையை நம்பி சாகுபடி செய்தனர். நெல் நாற்றுகள் செழித்து வளர்ந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை: கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தற்போது வேகமடையத் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. நாகை, கீழ்வேளூர், காக்கழனி, வடுகச்சேரி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருக்குவளை, வலிவலம், நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீடித்துவருகிறது. நாகையில் உள்ள பிரபல கோவிலான நீலயத்தாச்சியம்மன் ஆலயத்திற்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
நீடிக்கும் கனமழை: நாகை மாவட்டத்தில் விடாமல் கனமழை பெய்துவருகிறது. நாகப்பட்டினத்தில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடுகிறது. வீடுகளில் மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 50,000 ஏக்கரில் சம்பா பயிர் நடவுசெய்யப்பட்டிருந்தது. பயிரிடப்பட்டு 25 நாள்கள் ஆன இளம் சம்பா பயிர், மழைநீரில் மூழ்கியது. சுமார் 30,000 ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது.
மயிலாடுதுறை: கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை விடிய விடிய பெய்து தற்போதும் தொடர்கிறது. மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளநீர்: மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 68.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சீரான இடைவெளியில் மழை பெய்ததால் துலா உற்சவத்துக்காக திறக்கப்பட்ட நீர் காவிரி ஆற்றில் மட்டும் பாய்கிறது. பிற பகுதிகளில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மழை நீர் விரைவாக வடிந்து வருகிறது. தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதாலும், சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு உகந்தது என்பதாலும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications