கல்யாணமான ஒரே மாசத்தில்.. கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற புதுப்பெண்..காதலனுடன் சேர்ந்து ஆவேசம்
மயிலாடுதுறை : கல்யாணம் ஆகி ஒரே மாசம் தான் ஆகுது.. அதற்கு காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் தனது கணவரை கழுத்தை அறுத்துக் கெலை செய்ய முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த 30 வயதாகும் சரணவனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயிணிக்கும்(25 வயது) கடந்த மாதம் 3-ம் தேதி பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்திக்கிறது.
திருமணம் நடந்த ஒரே மாதத்தில் நடந்த சம்பவம் சரணவனை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

கழுத்தறுப்பு
தாட்சாயிணி, தனது காதலரான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருடன் சேர்ந்து கடந்த 5ம் தேதி சரவணனை தாக்கி உள்ளார். அவர்கள் சரவணனை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது

மனைவி கைது
இதுகுறித்து சரவணன் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உண்மை என தெரியவரவே, தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்
தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகியோரிடம் ஏன் கொலை செய்ய முயற்சித்தீர்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம். திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் காதல் இருந்து உள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இந்த காதலை தாட்சாயிணியின் பெற்றோர் ஏற்கவில்லை. மாறாக வற்புறுத்தி தாட்சாயிணியை சரவணனுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

கண்டித்த கணவன்
திருமணத்திற்கு பிறகும் தாட்சாயிணி, தனது காதலன் ராஜசேகருடன் பேசி வந்திருக்கிறாராம். இதை அறிந்த சரவணன் தனது மனைவியை கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தாட்சாயிணி சம்பவத்தன்று தனது காதலர் ராஜசேகரை தனது வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து சரவணனை கட்டிப்போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பியிருக்கிறார்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சிறையில் அடைப்பு
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்யாணம் ஆகி ஒரே மாதத்தில் காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் தனது கணவரை கழுத்தை அறுத்துக் கெலை செய்ய முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications