விபத்தில் இறந்தவர்களை பார்த்து அனுதாபம் கொண்ட என்னைப் பற்றி அவதூறாக சொல்வதா.. வைகோ கோபம்
சென்னை: பழனி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இரு வாலிபர்களின் உடல்களைப் பார்த்து வருந்திய என்னைப் பற்றி வாட்ஸ் ஆப்பில் சிலர் அவதூறாக செய்தி பரப்பி வருகிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அவர் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சைபர் பிரிவில் மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

17.02.2016 அன்று பழனி - உடுமலை ரோடு சண்முகநதி பாலம் அருகே கோவையில் இருந்து வந்த மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்களும் உயிர் இழந்தனர். விபத்து நடந்த இடத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழனி தாலுகா போலிஸார் அவ்விடத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தார்கள்.
சம்பவம் நடந்த நேரத்தில் பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய காரில் சென்றபோது விபத்தைப் பற்றி அறிந்தார். உடனே காரை நிறுத்தி விசாரித்துவிட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டார். இந்தச் செய்தி 18.02.2016 அன்று வெளியான பத்திரிகைகளில் இடம்பெற்றது. அந்த பத்திரிகை செய்தியின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். வாட்ஸ் ஆப்பில் பரப்பப்பட்ட பொய்யான செய்தியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
உண்மை நிகழ்வு இப்படி இருக்க வாட்ஸ்ஆப்பில் வைகோவின் கார் விபத்து ஏற்படுத்தியதாக அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியை விசமத்தனமாக பரப்பி வருகின்றார்கள். பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் செல்வராகவன்.












Click it and Unblock the Notifications