அக்னி பகவான் சூட்டை தணிக்க வரும் வருண பகவான் ..5 நாட்களுக்கு ஜில் மழை..குட் நியூஸ் சொன்ன வானிலை
சென்னை: அக்னி வெயில் அனலை கக்கி வரும் நிலையில் சூட்டை தணிக்க தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தை மக்கள் அவஸ்தையோடு அனுபவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கடப்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரஹீட் வெயிலும் கொளுத்தியது.சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும்,

மீனம்பாக்கம் மற்றும் எண்ணூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. கரூர் - பரமத்தி மற்றும் புதுச்சேரியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை, கடலூர் மாவட்டங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகவும்,திருச்சியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல, பாளையங்கோட்டை, தஞ்சை, விருத்தாசலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், ஈரோடு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆகிய பகுதிகளில் 101 டிகிரி வெயில் வாட்டியது. கடும் வெயில் நிலவுவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அனல் வெயிலுக்கு இதமாக வருண பகவான் கருணையால் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானலை ஆய்வு மையம் குளுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications