மேட்டூர் அணை மூடப்பட்டது: மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறுத்தப்பட்டது. இதனால், நீர் மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மேட்டூர் அணை போதுமான தண்ணீரின்றி வறண்டு கிடந்ததால், ஜூன்12-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2- ஆம் தேதிதான் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜனவரி 28-ஆம் தேதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
ஜனவரி 28ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை வரை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 167 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.40 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 384 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 18.70டி.எம்.சி.யாக இருந்தது.
அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணை நீர் மின் நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட், கதவணைகளில் 150மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications