வறண்ட மேட்டூர் அணையில் விவசாயம்... நந்தி சிலையின் முழு தரிசனம் - அணையை தூர்வாருமா அரசு
மேட்டூர் அணை முற்றிலும் வறண்டு குளம் போல காட்சியளிக்கிறது. தண்ணீர் வற்றிய பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது.
சேலம்: மேட்டூர் அணை முற்றிலும் வறண்டு விட்டது. மிகப்பெரிய மேட்டூர் அணை தற்போது குளம் போல காட்சி அளிக்கிறது. தண்ணீர் வற்றிய பகுதிகளில் விவசாயம் செய்யப்படுவதால் பச்சைப் பசேல் என காட்சி தருகிறது மேட்டூர் அணை.
மேட்டூர் அணை மொத்தம் 151 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அணையில் 120 அடி நிரம்பும் போது 151 சதுர கி.மீ சுற்றளவில் நீர் தேங்கி நிற்கும். அப்போது மிகப்பெரிய சமுத்திரம் போல காட்சியளிக்கும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் அணை 100 அடியை எட்டுவதே கனவாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் அணையின் நீர்தேக்கப்பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் கிறிஸ்தவ கோபுரம், நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் ஆகியவை வெளியே தெரிவது வழக்கம். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டது. சில சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சிறிய குளமாக மாறிவிட்டது அணை

மேட்டூர் அணை
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் விவசாயத்திற்கு முக்கிய நீராதரமாக விளங்குவது மேட்டூர் அணை. இந்த அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய சாகுபடிக்காக ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்பட 12 மாவட்டங்களிலும் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படும்.

பொய்த்துப்போன பருவமழை
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனது. கர்நாடகாவும் தண்ணீர் தராமல் கை விரித்து விட்டது. இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்தது.
இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு போதுமான தண்ணீர் திறந்து விட முடியாததால் விவசாய பயிர்கள் கருகின. பல விவசாயிகள் அதிர்ச்சியில் இறந்தனர். மேலும் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

குளமாறிய மாறிய அணை
அணையில் தற்போது 25 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில் 15 அடி முதல் 18 அடி வரை உயரத்திற்கு வண்டல் மண் குவிந்துள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. விரைவில் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நந்தி சிலை
ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தின் மேல் பகுதியும், நந்திசிலை முழுமையாக வெளியே தெரிகிறது. அணை பகுதியில் விவசாயம் செய்துள்ளதால் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இந்த புராதன நினைவு சின்னங்களால் பண்ணவாடி பரிசல்துறை சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது.

அணை பகுதியில் சாகுபடி
தற்போது அணையின் நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டது. 90 சதவீத நீர் பிடிப்பு பகுதி விளைநிலங்கள் போல காட்சி அளிக்கிறது. தண்ணீர் இல்லாத இந்த நேரத்தில் அணையின் கரையோர கிராமத்தில் வசிக்கும் மக்கள் நீர் பிடிப்பு பகுதியில் எள், சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். நடப்பாண்டில் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கும் என்பதால் வறண்ட நீர்பரப்பு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

அணையை தூர் வார வேண்டும்
மேட்டூர் அணை கட்டி 83 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு முறை கூட அணையை தூர் வாரவில்லை. இந்த அணையை தூர் வாரினால் 15 முதல் 18 அடி வரை கூடுதலாக தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும் இந்த நேரத்தில் மேட்டூர் அணையை தூர் வாரி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அணை பகுதியில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இதற்கு எந்த அளவிற்கு ஒத்துக்கொள்வார்கள் என்பதே கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications