ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்.. மள மளவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்..எப்போது நிரம்பும்?
சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஒகேனக்கலில் தொடர்ந்து 6ஆவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகம் உள்ளதால் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கேஆர்எஸ் அணைகளில் இருந்து விநாடிக்கு 14000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து 6வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 13,110 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு 6,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 55.40 அடியாகவும், நீர் இருப்பு 20.696 டி.எம்.சியாகவும் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், 2 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை எப்போது நிரம்பும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications