பாதுகாப்பான ரயில்வேயைப் பாருங்க-டிராக்கை விட்டு விலகி போஸ்ட் ஆபீஸ், பார்க்கிங்கில் போய் மோதிய ரயில்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சிறிய ரயில் விபத்தால் தபால் நிலையம் சேதம் அடைந்தது.
நாகர்கோவில் : நாகர்கோவிலில் இருந்து சென்னை வரவேண்டிய சிறப்பு ரயில் மோதியதில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்த தபால் நிலையம் சேதமடைந்தது.
நாகர்கோவில் இருந்து சென்னைக்கு வாரந்தோறும் ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல இயக்கப்பட்ட ரயில், புறப்படத் தயாராக இருந்தது. ரயில் நிலையத்திற்கு உள்ளாகவே இயக்கி பரிசோதிக்கப்பட்டது.

அப்போது பின்னோக்கி வந்த ரயிலின் கடைசிபெட்டி நடைபாதையில் இருந்து விலகி எதிர்பாராத விதமாக ரயில் நிலையத்தில் இருந்த தபால் நிலையத்தின் மீது மோதியது. இதில் தபால் நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதில் ஊழியர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் சேதமடைந்தது. ரயில் பின்நோக்கி வருவதைக் கண்ட பயணிகள் அலறியடித்து ஓடியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ரயில் ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications
