தனுஷ்கோடி கடலில் "ஆயிரம்" ஆச்சரியம்.. லைட் ஹவுஸ் கிட்ட அதென்ன? ராமேஸ்வரம் மீனவரின் வலையில் அதிசயம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில், அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், கடல் பசு, டால்பின், திமிங்கலம், அரிதான கடற்பாசிகள், துடுப்பு மீன்கள், என்று பலவகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன... இவை பொதுவாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.. எனினும், சமீபகாலமாகவே மேலும் சில அரியவகை மீன்கள் உள்ளிட்டவை ராமநாதபுர கடலில் தென்பட்டு வருகிறது.. அந்தவகையில் இப்போதும் ஒரு வியப்பு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட , ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பினார்கள்.

மீனவர் வலையில் ஆச்சரியம்
அப்போது மீனவர்களின் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீன் (Oar Fish) அதாவது துடுப்பு மீன் சிக்கியிருக்கிறது.
இந்த மீன் பத்து கிலோவுக்கு மேல் எடையும், 5 அடி நீளமும் இருந்துள்ளது.. கடற்பகுதியில் இப்படியொரு மீன் முதன்முறையாக பிடிபட்டதால், அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றார்கள். சாவாளை மீன் போலிருக்கம் இந்த மீன் இதுவரையில் எங்களுடைய வலையில் சிக்கியது இல்லை என்கிறார்கள் மீனவர்கள்.
ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன்
அன்றைய காலத்தில் இந்த மீனுக்கு டூம்ஸ் டே மீன் என்பார்களாம்.. ஆரஞ்சு நிற துடுப்புடன் நீளமான, சதை பிடிப்பற்ற பட்டையான ரிப்பன் போல உடம்பை கொண்ட இந்த வகை மீன்கள், கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பார்களாம்.. ஆனால், அதெல்லாம் மூடநம்பிக்கை என்கிறார்கள் அதிகாரிகள்.
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தெற்கு கடற்பகுதியில் மற்றொரு மர்ம சம்பவம் நடந்துள்ளது.. தனுஷ்கோடி கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாகவே நாட்டுப்படகுகளில் சில பொருட்கள் கடல் வழி இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக கடத்தப்படுகிறதாம்.
கலங்கரை விளக்கம் எதிரே
குறிப்பாக, கஞ்சா, கடல் அட்டைகள், கடல் குதிரை, அழகு சாதன பொருட்கள், ஷாம்பு, காபித்தூள் போன்ற பொருட்கள் பெருமளவு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.. அதனால்தான், இதுபோன்ற கடத்தல்களை கட்டுப்படுத்தவே எல்லைகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது..
இந்நிலையில் தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் எதிரே தெற்கு கடல் பகுதியில் காபித்தூள், ஷாம்பு பாக்கெட்டுகள் ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கி கிடப்பதை அங்குள்ள மீனவர்கள் பார்த்துள்ளனர்.. இதுகுறித்து கடலோர போலீசாருக்கும், இந்திய கடலோர காவல் படையினருக்கும் மீனவர்கள் தகவல் தந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கில் பாக்கெட்டுகள்
இதையடுத்து, கலங்கரை விளக்கம் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, கடலோரத்தில் காபித்தூள், ஷாம்பு பாக்கெட்கள் கரை ஒதுங்கி கிடந்துள்ளன.. அவைகளை எல்லாம் சேகரித்து, மண்டபம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்து சோதனை செய்துள்ளனர்..
அப்போது அதில் 7344 பாக்கெட் காபித்தூள், 6900 ஷாம்பு பக்கெட்டுகள் இருந்துள்ளன.. எனினும், இவைகள் எப்படி கடலோரத்தில் குவிந்து கிடந்தது என்று தெரியவில்லை..
இந்த பொருட்கள் விழுந்து கிடந்த பகுதியிலேயே என்ஜின் ரிப்பேராகி நாட்டுப்படகு நின்று ஒன்று கொண்டிருந்ததாம்.. எனவே, அதிலிருந்த 3 பேரிடமும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் தனுஷ்கோடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications