பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றாதீர்! மார்க் மட்டுமே திறமையை தீர்மானிக்காது! -தமிமுன் அன்சாரி
நாகை: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றக் கூடாது என்றும் மதிப்பெண்கள் மட்டுமே திறமையை தீர்மானிக்காது எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
கல்வி என்பது இலகுவாக இருக்க வேண்டுமே தவிர அது சுமையாக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;

''கல்வி என்பது இலகுவாக இருக்க வேண்டும். அது சுமையாக மாறக் கூடாது.கல்வி முறையில் திணித்தல் இருக்கக் கூடாது. அது இனிமையான கற்றலாக இருக்க வேண்டும். ஒருவரின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே திறமையை தீர்மானித்து விடாது.
சராசரி மாணவர்களே பிற்காலத்தில் பெரும்பாலும் ஆளுமைகளாக மாறுகிறார்கள். இதை அனுபவ ரீதியாக பார்க்கிறேன்.நானும் அரசுப் பள்ளி மாணவன்தான். சராசரி மதிப்பெண் எடுத்தவன்தான். நான் எந்தப் பேச்சுப்போட்டியிலும் பங்கேற்றதில்லை. எனவே போட்டியில் வெல்பவர்களை மட்டுமே திறமையானவர்களாக கருதிவிடக்கூடாது. புத்தகங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பாடப்புத்தகங்கள் மட்டுமே அறிவை தருவதாக நம்பக் கூடாது. அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், மாநில, மாவட்ட ரீதியாக முதலிடம் வர வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பிள்ளைகளை வதைப்பதை ஏற்க முடியவில்லை.
கல்வி சித்ரவதையாக மாறிட அனுமதிக்கக் கூடாது.
புத்தகங்கள் பிள்ளைகளை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது. அதனால்தான் பிள்ளைகள் பள்ளிக்கூட நாட்களை நினைத்து அஞ்சும் நிலை உருவாகி வருகிறது.கோடை விடுமுறை நீட்டிக்கப்படாதா? அடைமழை பெய்யக்கூடாதா? அதன் மூலம் விடுமுறை கிடைக்காதா? என எதிர்பார்க்கிறார்கள்.
மழை - புயல் குறித்த வானிலை அறிவிப்புக்காக தவமிருந்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் நமது கல்விமுறை கடினமாக மாறி வருவது தான். நான் MLA வாக இருந்த போது, அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆரம்ப கல்வி குறித்து அறிய பின்லாந்துக்கு பயணம் போனார். அங்கு ஏன் போனீர்கள் எனக் கேட்டேன். உலகிலேயே அங்கு தான் ஆரம்ப கல்வி இலகுவாக அளிக்கப்படுகிறது என்றார். அங்கு வீட்டில் பெற்றோர்களிடம் பாதுகாப்பாக இருப்பதுபோல, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களே பெற்றோர்களாக இருப்பதால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

அங்கு செயல் வழி- விளையாட்டு வழி பாடத்திட்டங்கள் இருப்பதால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக படிக்கிறார்கள் என்றார். அதனால் ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கூடம் போக வேண்டும் என பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள் என்றும் கூறினார். நான் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தப்போது, பின்லாந்து கல்வி முறையை நமது ஆரம்ப பள்ளிக்கூடங்களில் அமல்படுத்த முயற்சி செய்யுங்கள் என கடிதம் அளித்தேன்.
ஏனெனில் கல்வி மகிழ்ச்சி நிறைந்ததாக மாற வேண்டும். இளம் வயதிலேயே கல்வி கற்கும் போது நல்ல பண்புகள், ஒழுக்கம், நேர்மை, இரக்கம், சேவை ஆகியவைகளையும் கற்க வேண்டும். ஆசிரியர்கள் அதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் கல்வி கற்பதை தாழ்வாக கருத வேண்டியதில்லை. கிராமங்களிலிருந்து உருவாபவர்கள்தான் பெரும்பாலும் அரசியலில், தொழிலில், சினிமாவில், இலக்கியத்தில், இதர துறைகளில் ஒளிர்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.''












Click it and Unblock the Notifications