ஜெயலலிதா மர்ம மரணத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்- மு.க.ஸ்டாலின் பொளேர்
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை : ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்தான் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்கள் ஆகியன ஆதரவு அளித்துள்ளன. ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியை அகற்றும் தருணம்
இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் ஆட்சியை அகற்றும் தருணம் வந்துவிட்டது.

சூறையாடியதில்...
தமிழகத்தை காப்பாற்ற பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதை வரவேற்கிறேன். தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றுமை தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தை சூறையாடிவதில் அதிமுக இருபிரிவினருக்கும் தொடர்பு உண்டு.

ஓபிஎஸ் மறந்து விட்டார்
மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்கள், சட்டினி சாப்பிட்டார்கள், உடற்பயிற்சி செய்தார்கள் என ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள். பதவி கிடைத்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து பேசியதை ஓ.பன்னீர் செல்வம் மறந்து விட்டார். பதவி விலகியதும் ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரும் ஓபிஎஸ், ஜெயலலிதா மறைந்தவுடன் 62 நாள்களாக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து வாய் திறக்காதது ஏன்.

மூன்று குழல் துப்பாக்கி
அதிமுகவின் அணிகள் இணைந்தவுடன் ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என்கின்றனர். ஆனால் இவர்கள் மூன்று குழல் துப்பாக்கிகள். ஒன்று ஈபிஎஸ், இரண்டாவது ஓபிஎஸ், 3-ஆவது சசிகலா. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள கமிஷன் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

தொழில் வளர்ச்சி இல்லை
இந்த குதிரை பேர ஆட்சியில் தொழில் வளர்ச்சி இல்லை. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை, பருப்பு, சர்க்கரை என எதுவும் இல்லை. இன்னும் கொஞ்ச நாள்களில் ரேஷன் கடையே இருக்குமா என தெரியவில்லை. ஸ்கூட்டி வழங்குவதற்காக அதிமுக எம்.பி. ஒருவர் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கி வருகிறார். இந்த முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் திமுக களத்தில் இறங்கும்.

முன்னெச்சரிக்கை இல்லை
ஓகி புயல் உருவாவதற்கு முன்பே இந்த அதிமுக அரசு எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு குமரியில் உறவினர்கள் போராடி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களோ எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக தோற்கும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மீனவர்களின் பாதிப்புகள் குறித்த விவரங்களை நேரடியாக ஆளுநரிடம் வழங்கவுள்ளோம் என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications