Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மான்னா சும்மாவா...

Subscribe to Oneindia Tamil

ஆபிஸ் அசிஸ்டென்ட் முதல் ஐ.ஏ.எஸ் ஆபிசர் வரை எல்லோருக்கும் முதல் ஆசிரியர் அவங்க அம்மாதான். இந்த அம்மாக்களோட கல்வி சமச்சீர் கல்வியா இருக்கும். எல்லா அம்மாக்களுக்கும் ஒரே பாடத்திட்டம்தான். எந்த மாணவனும் பெயிலானதே இல்லை. என்னடா பில்டப் ஓவரா இருக்கே ஏதோ சமச்சீர் பாடத்திட்டம் அது இதுன்னு போகுதேன்னு நினைக்கிறீங்களா? கல்வின்னா என்ன? பள்ளிக்கூடம் போய் படிக்கிறதுதானா? இல்லை புத்தகத்தை வச்சு படிக்கிறதுதானா?. இல்லை. பார்த்தோ கேட்டோ எதைத் தெரிஞ்சுக்கிட்டாலும் அது கல்விதான்.

இன்னைக்கு நாம டிப் டாப்பா டிரஸ் பண்ணலாம். ஆனா முதன்முதலா... நமக்கு டிரஸ் போட கத்துக்கொடுத்தது யார்? அம்மாதானே? எத்தனை தடவை பையன்கள் டவுசரின் ஒரு குழாயில ரெண்டு காலை மாட்டிக்கிட்டு கீழே விழுந்திருப்பாங்க. அம்மா நம்ம கைகளை அவங்க தோள்ல வச்சுகிட்டு எவ்வளவு பொறுமையா ஒவ்வொரு காலா மாட்டி விடுவாங்க. இன்னைக்கு போர்க் ஸ்பூன் எல்லாம் வச்சு பிரமாதமா சாப்பிடுறோம். ஆனா நமக்கு முதன்முதலா எப்படி சாப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுத்தது அம்மாதானே. பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் சடை போட்டு பூ வச்சு, பவுடர் அடிச்சு பைனல் டச் ஆ கன்னத்தில கருப்பு மை வச்சு விடுவாங்களே. நூறு ப்ளீச்சிங்... நூறு ஃபேசியல் பண்ணாலும் அந்த அழகு வராது. இப்படி நமக்கு முதல் டயட்டீசியன்... பியூட்சியன், காஸ்ட்யூம் டிசைனர் எல்லாமே நம்ம அம்மாதான்.

இப்படி பல திறமைகளைக் கொண்ட அம்மாவுக்கு சமைக்கிறது மட்டுமே வேலை இல்லைங்க... அவங்களோட ஒவ்வொரு செயலிலும் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை இருக்குன்னு சொல்லியிருக்கிறார் ஸ்ரீகந்தசாமி வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.இளமாறன். நம்முடைய அம்மாவைப் பற்றியும் அவங்க செய்ற வேலைகளில் உள்ள அறிவியல் கருத்துக்களைப் பற்றியும் நமக்குத் தெரியாத பல உண்மைகளையும் சொல்லியிருக்கார் மேற்கொண்டு படியுங்களேன்.

அம்மாவும் நியூட்டன் முதல்விதியும்

அம்மாவும் நியூட்டன் முதல்விதியும்

நமக்கு முதல் அறிவியல் ஆசான் நம்ம அம்மாதான். அடிக்கடி நம்ம அம்மா அங்கலாய்ப்பா சொல்லுவாங்களே " போட்டது போட்டபடி அப்படியே கிடக்கு... நான் எடுத்து வச்சாதான் உண்டு... வேற யாராவது பண்றீங்களா?". இதுதான் நம்ம ஐசக் நியூட்டனோட முதல் விதி. "ஓய்வாக இருக்கும் பொருளும்.. இயக்கத்தில் இருக்கும் பொருளும் வெளிவிசை செயல்படும்வரை தனது நிலையை தானே மாற்றிக்கொள்ளாது". அம்மா சொன்ன போட்டது போட்டபடி கிடக்கும் பொருட்கள்தான் நியூட்டன் சொன்ன ஓய்வாக இருக்கும் பொருளும் இயக்கத்தில் இருக்கும் பொருளும். அம்மா அவற்றை எடுத்து வைப்பதுதான் நியூட்டன் சொன்ன வெளிவிசை. நியூட்டன் விதி சரிதானே.

அரிசி களையும் அம்மா

அரிசி களையும் அம்மா

அம்மா அரிசி களையும் போது பக்கத்துல உட்கார்ந்து பாருங்க.... ஒரு பாத்திரத்தில அரிசியைப் போட்டு தண்ணீர் ஊற்றி கழுவின பின்னாலே திரும்பவும் தண்ணீரை விட்டு அந்த பாத்திரத்தை லேசா சாய்ச்சு... ஒரு கையால அசைச்சு கிட்டே இருப்பாங்க.... அதே சமயத்தில பாத்திரத்துக்குள்ள இன்னொரு கையால ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமா அரிசியை வர வைப்பாங்க. கை நிறைய அரிசி வரவும் வேறொரு பாத்திரத்தில போடுவாங்க. இப்படியே திரும்பத் திரும்ப செய்யும் போது கல்லு மட்டும் அடியில இருக்கும். காரணம் கல்லு அரிசியை விடக் கனமானது. பாத்திரத்தோட அசைவுல கனமான கல்லு கொஞ்சம் கொஞ்சமா கீழே போயிரும். பூமியில உலோகத்தின் தாதுக்கள் எல்லாம் மேலாக கிடைக்காது. பூமிக்கு அடியில ஆழமாத்தான் கிடைக்கும். அம்மா பாத்திரத்தை அசைச்சு லேசான அசைவுகளை உருவாக்கும் போது கனமான கல்லு கீழே போறது மாதிரி பூமியின் இயக்கத்தில் ஏற்படுகிற அசைவுகள் மூலமாக கல்லு மண்ணை விட கனமாக இருக்கிற உலோக தாதுக்கள் பூமிக்கு அடியில போயிருது.

அம்மாவின் தொழில்நுட்பம்

அம்மாவின் தொழில்நுட்பம்

அம்மா முறத்துல தானியங்களை புடைக்கும் போது உற்றுப் பாருங்க... அவங்களோட கண், மனம், கைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு அற்புதமாக இருக்கும். அவங்க கையில கொடுக்கக் கூடிய விசையில தானியங்கள். முறத்துக்கு உயரமாக போய் திரும்ப முறத்திலேயே விழும். அப்படி விழும்போது சரியா முறத்துக்கு கீழே தட்டுவாங்க. அதாவது ஒரு அதிர்வை ஏற்படுத்துவாங்க.

இந்த தொடர் செயல்பாட்டால தேவையில்லாத லேசானபொருட்கள் எல்லாம் முறத்துக்கு முன்னாலே போயிரும். அதிர்வுகள் மூலமா அம்மா லேசான பொருட்களையும் கனமான பொருட்களையும் தனித்தனியா பிரிக்கிறாங்க. இந்த அம்மா தொழில்நுட்பம்தான் இன்டஸ்டிரியில மீயொலி அதிர்வுகளை ( ultra sonic vibration) உருவாக்கி பொருட்களை பிரிப்பதற்கும் பலவகை கூழ்மங்கள் ( colloids) உருவாக்குவதற்குப் பயன்படுத்துறாங்க.

அம்மா என்ற அற்புதம்

அம்மா என்ற அற்புதம்

அம்மா சின்னக்குழந்தைக்கு மருந்து புகட்டும்போது பார்த்திருக்கிறீங்களா. சங்குல மருந்தை எடுத்து குழந்தையின் நாக்குல சங்கால அமுக்கிக்கிட்டு மருந்தை ஊத்துவாங்க. மருந்தை ஊத்தும்போது குழந்தை மூக்குல ஊதுவாங்க அல்லது குழந்தை மூக்கை பிடிப்பாங்க. குழந்தை படக்குன்னு மருந்தை முழுங்கிடும். குழந்தை நாக்கை சங்கின் நுனியால அமுக்கிறது அது மருந்தை துப்பாம இருக்கிறதுக்கு. நம்மோட மூச்சுக்குழாய்க்கும் உணவுக்குழாய்க்கும் ஒரே வால்வுதான். மூச்சுக்குழாய் திறந்தால் உணவுக்குழாயை வால்வு மூடும் உணவுக்குழாய் திறந்தால் மூச்சுக்குழாயை வால்வு மூடும் அம்மா குழந்தையின் மூக்கை பிடிக்கும் போது மூச்சுக்குழாயின் வால்வு மூடி உணவுக்குழாய் திறக்கும். மருந்து டக்குன்னு உள்ளே போயிரும். நம்ம உடல் அமைப்பை தெரிஞ்சுக்கிட்டு அம்மா என்ன அற்புதமா செயல்படுறாங்க.

அம்மாவுக்கு தெரியாதா?

அம்மாவுக்கு தெரியாதா?

நாம சாப்பிடும் போது புரையேறிட்டா உடனே அம்மா தலையில தட்டுவாங்க. புரையேறும்போது மூச்சுக்குழாயை மூடுவதா? உணவுக்குழாயை மூடுவதான்னு வால்வு குழம்பிப் போயிரும். சமயத்துல மூச்சுக்குழாய் திறந்து அதுக்குள்ள சாப்பாடு போயிரும். அம்மா தலையில தட்டும் போது மூச்சுக்குழாயிற்குள்ளே போன சோத்துப் பருக்கை உணவுக்குழாயிற்குள்ளே போயிரும். இப்படி நம்ம அம்மாவுக்கு பயலாஜி... அனாடமி எல்லாம் அத்துப்படி..

சமையல் எக்ஸ்பர்ட்

சமையல் எக்ஸ்பர்ட்

அம்மா சமைக்கும் போது பருப்போ அல்லது மட்டனோ வேகுறதுக்கு லேட்டானா கொஞ்சம் இஞ்சியைத் தட்டியோ அல்லது தேங்காய் சிரட்டையையோ போடுவாங்க பருப்பு சீக்கிரம் வெந்திரும். இதுல எவ்வளவு அறிவியல் கருத்து இருக்கு தெரியுமா? சமையலுக்குப் பயன்படுத்துற தண்ணீர் உப்புத்தண்ணீரா இருந்தா அதன் கொதிநிலை அதிகமாகும். அதனால பருப்பு வேக லேட் ஆகும். இஞ்சிக்கும் தேங்காய் சிரட்டைக்கும் உப்புக்களை உறிஞ்சக்கூடிய தன்மை இருக்கு. உப்புக்களை உறிஞ்சிக்கிறதால தண்ணீரின் கொதிநிலை குறைந்து பருப்பு வேகமாக வெந்திடும். அம்மாவோட டெக்னாலஜி பார்த்தீங்களா? பித்தம் இருக்கிறவங்க இஞ்சிச்சாறு சாப்பிடுறதுக்கும் இதுதான் காரணம். பித்தத்திற்கு காரணமாக உப்புக்களை இஞ்சி உறிஞ்சிடும். நம்ம அம்மா ஒரு வைத்தியரும் கூடங்க.

அம்மா ஒரு டாக்டர்

அம்மா ஒரு டாக்டர்

குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை இருக்கான்னு சந்தேகம் வந்தா லேப்ல டெஸ்ட் பண்ணுவோம். நம்ம அம்மா ஒரு பயோகெமிஸ்ட்ரி மெத்தடு வச்சிருக்காங்க. ஒரு சிரட்டையில சோற்றுப் பருக்கைகளைப் போட்டு அதுல குழந்தையை சிறுநீர் இருக்கச் செய்து (பெரியவங்களுந்தான்) வீட்டுக்கூரைமேல் நைட் வச்சிருவாங்க. காலையில சிறுநீரை கொட்டிட்டு சோற்றுப் பருக்கையைப் பார்க்கும் போது அது மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் மஞ்சள் காமாலை கன்பார்ம் இல்லாட்டி நோ ஒர்ரி. சோற்றுப் பருக்கைக்கு மஞ்சள் காமாலைக்குக் காரணமான உப்புக்களை (pile salt) உறிஞ்சக்கூடிய சக்தி இருப்பதுதான் காரணம். ஓட்டு மேல இரவுல வைக்கிறது ஏன் சோறு உப்புக்களை உறிஞ்சி தனக்குள்ளேயே வச்சிக்கிறதுக்கு சாதகமான வெப்பநிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறதுக்குத்தான். அம்மா எப்படி படிக்காமலேயே பயோ கெமிஸ்ட்டா இருக்கிறாங்க பாத்தீங்களா?.

கண்ணுக்கு கண்ணாக

கண்ணுக்கு கண்ணாக

ராத்திரி மொட்டை மாடியில உலாத்துறதும் விளையாடுறதும் ஒரு தனிசுகம் அப்போ வானத்தில இருந்து நட்சத்திரம் எரிஞ்சு கீழே விழறதப பார்த்திருப்பீங்க. (பேச்சு வழக்குல நட்சத்திரம் எரிஞ்சு விழுறதுன்னு சொல்றோம். ஆனா அது meteors ங்கிற விண் வீழ் கற்கள்). நட்சத்திரம் எரிஞ்சு விழறத்த பார்த்தா உடனே பச்சை இலையைப் பார்க்கணும். இல்லைன்னா நமக்கு ஞாபக சக்தி குறைஞ்சிரும்னு ( நமக்கு ஏற்கனவே ரொம்ப குறைஞ்சி போயிருக்கு) அம்மா சொல்வாங்க. நமக்கு சிரிப்பா வரும். நட்சத்திரத்துக்கும் ஞாபக சக்திக்கும் என்ன சம்பந்தம்? சினிமா நட்சத்திரம்தான் ஞாபக மறதியில சொன்ன வயசயே பத்து வருஷமா சொல்வாங்க.

அம்மான்னா சும்மா இல்லை

அம்மான்னா சும்மா இல்லை

அம்மான்னா சும்மாவா? அம்மா சிறந்த கண் நிபுணர். எரிஞ்சு விழற நட்சத்திரம் பிரகாசமா அதிக வெளிச்சத்தோட விழும் நாம அப்படி ஒரு பிரகாசமான ஒரு பொருளைப் பார்க்கும் போது, நம் கண்விழியோட பாப்பா (pupil of eye) ரொம்ப சுருங்கும். ஓவரா சுருங்கக்கூடாதுல்ல... ( சில பேருக்கு கொட்டாவி விட்டா வாய் அப்படியே நின்னுக்குமே) அப்படி சுருங்கி நின்னுக்கிட்டா பாப்பா பாதிக்கப்பட்டு கண் பார்வை போயிடும். இதை தவிர்க்கணும்னா உடனே பாப்பாவை விரிய வைக்கணும். அதுக்குத்தான் அம்மா பச்சை இலையைப் பார்க்கச் சொல்றாங்க இருட்டு நேரத்தில மரமோ செடியோ பச்சையா தெரியாது ( இலைகள் அதன் மீது ஒளி படும்போது மட்டும்தான் எல்லா நிறத்தையும் உறிஞ்சிக்கிட்டு பச்சை நிறத்தை வெளியிடும் ) நாம இருட்டுல உத்துப் பார்த்து பச்சை இலையைத் தேடும் போது பாப்பா விரிவடையும். ஆக நம்ம கண்ணு safe. எப்படி நம்ம அம்மாவோட டிரிக்?

நம்ம அம்மா பல விசயங்கள் தெரிஞ்ச பல்கலைக்கழகங்க... ‘அம்மா உனக்கெல்லாம் என்ன தெரியும்னு கேட்டு நீங்க அசிங்கப்படாதீங்க'. நம்மளை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிற அம்மாவை நம்ம கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்கிடுவோமா? அம்மான்னா சும்மாவா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+