காஞ்சிபுரத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணை தூக்கி வீசிய கார்… பதறவைக்கும் வீடியோ
காஞ்சிபுரம்: ஒரு இரவு நேரம் சாலையோரம் கைக்குழந்தையை சுமந்தபடி நடந்து செல்லும் பெண்... அப்போது வேகமாய் வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணை தூக்கி வீசுகிறது. அந்தப்பெண்ணின் உடன் வந்தவர்களால் நடந்தது என்னவென்று உணரும் முன் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இது குறும்படமோ, திரைப்படத்தில் வந்த காட்சியோ அல்ல... சில தினங்களுக்கு முன்னர் நடந்த நிஜ விபத்து இது. காஞ்சிபுரத்தில் நடந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கார் மோதிய பெண்ணின் பெயர் செல்வி என்பதாகும். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருக்கு யுவஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தை உள்ளது. கணவரை விட்டு பிரிந்து வாழும் செல்வி, கடந்த 8ம் தேதி அதிகாலையில் தனது கைக்குழந்தையுடன் சென்னை செல்வதற்காக காஞ்சிபுரம் காந்திரோடு, காமராஜர் சிலைக்கு எதிர்புறம் உள்ள பிரதான சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. உறவினர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த செல்வி மீது, வேகமாக வந்த கார், ஒன்று மோதியது. இதில் குழந்தை யுவஸ்ரீயும், செல்வியும் சில மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பதறி துடித்து ஓடினர். செல்வியையும், குழந்தையையும் தூக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கை, கால் உடைந்த நிலையில் உயிருக்கு போராடிய குழந்தை யுவஸ்ரீயை உடன் வந்த உறவினர்கள், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தை சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தை யுவஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விபத்து குறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கைக்குழந்தையுடன் பெண் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சியை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். யுடுயூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியானது.
இந்த விபத்தை ஏற்படுத்தியவர் காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியை சேர்ந்தவர் வினோத் கண்ணன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினோத் கண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். உடனடியாக அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
போக்குவரத்து காவல்துறையினரால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்து காவல்துறையினர் 4 நாட்களாக விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்? என்று உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ வெளியானது குறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு செய்த செய்தியாளர்கள், இன்ஸ்பெக்டரிடம் விவரம் கேட்க முயன்றனர். ஆனால், காவல்துறையினர் தரப்பில் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications