சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சென்னை போலீஸ்... தாய் புகார்
சென்னை: ஆள்மாறாட்டத்தில் தவறுதலாக ஒரு சிறுவனை பிடித்துச் சென்ற போலீஸார் அவரை கண்மூடித்தனமாக தாக்கி படுகாயங்களுடன் சாலையோரத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர். சிகிச்சைக்கு சிறுவனை அழைத்து சென்ற போது. இதை உயரதிகாரிகளிடம் தெரிவிக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுவனின் தாய் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் முகேஷ் , 17. சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவர் சனிக்கிழமையன்று இரவு 11 மணியளவில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, டிஎன் 22 ஜி 0711 என்ற வௌ்ளை நிற டாட்டா சுமோ காரில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ, 3 ஏட்டுக்கள் என சொல்லிக் கொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், அசந்து தூங்கிக் கொண்டிருந்த முகேஷை வாய், மூக்கு, கன்னம் என கண்மண் தெரியாமல் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய 5பேதலீசாரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வின்சென்ட் நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். நாங்கள் போலீஸ் கூடுதல் கமிஷனர் ஒருவரின் ஸ்பெஷல் பார்ட்டி என்ற கும்பல், வின்சென்டையும் அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி முகேஷை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு சுமோ காரில் போட்டுக் கொண்டு சென்றனர்.
பின்னர் மீண்டும் முகேஷை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து நாம் தேடிவந்தது இவன் அல்ல என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
கண்ணகி நகர் அருகில் நடுரோட்டில் முகேஷ் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கை, கால்கள், முகம் வீங்கிய நிலையில் முக்கி முனகியபடி கிடந்துள்ளார். அங்கு இருந்த பொதுமக்கள் அந்த முகேசுக்கு தண்ணீர் கொடுத்து மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.
தன்னை தூக்கிச் சென்ற போலீசார் தனது கண்ணை கட்டி அழைத்துச் சென்று ஓரிடத்தில் வைத்து லத்திக்கம்பால் அரக்கத்தனமாக தாக்கியதாக முகேஷ் வீட்டில் தெரிவித்துள்ளார். இதில் முகேஷின் வாய், கன்னத்தில் பயங்கரமாக காயம் ஏற்பட்டுள்ளது. கழுத்து, கை, கால் எலும்புகள் முறிந்து விட்டன.
ஆபத்தான நிலையில், நடக்க முடியாமல் அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு யார் தாக்கியது என டாக்டர்கள் கேட்கவும், போலீசார் தாக்கியதாக முகேஷ் கூறவும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து முகேஷ் குடும்பத்திற்கு வந்த செல்போன் அழைப்பு ஒன்றில் தன்னை போலீஸ் என்று அறிமுக்கப்படுத்திக் கொண்டு பேசிய ஒருவர், கமிஷனரிடமோ மேல் அதிகாரிகளிடமோ செல்ல வேண்டாம். தெரியாமல் நடந்து விட்டது. பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே முகேஷ் தாக்கப்பட்ட இந்த செய்தி புகைப்படங்களுடன் வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகிறது. தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுவனின் தாயார், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஏழை சிறுவனை அரக்கத்தனமாக தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை பாயுமா?












Click it and Unblock the Notifications