முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது: வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிப்பு
தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,916 கனஅடியில் இருந்து 3,357 கனஅடியாக உயர்ந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தொட்டுள்ளதால், அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 7ஆம் தேதியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு, 1,816 கன அடியில் இருந்து 456 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
அணைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து கடந்த மூன்று நாட்களாக அதிகரித்தது. இதே அளவு நீர்வரத்து இருந்தால், நீர்மட்டம் நாளை 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் திறப்பு அதிகரிப்பு
ஆனால், தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 456 கன அடியில் இருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நீர்வரத்து அதிகரித்ததால், அதிக தண்ணீர் திறந்ததாகவும், நீர்மட்டத்தை சீராக உயர்த்தவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தனர்.

அச்சமடைய வேண்டாம்
அணையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் உள்ள மோகனன் பிள்ளை தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மோகனன் பிள்ளை, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

வெள்ள அபாய எச்சரிக்கை
இன்னும் 1 அடி மட்டுமே நிரப்ப முடியும். அணைக்கு நீர் அதிகரித்தால் எந்த நேரமும் திறந்து விடப்படலாம் என்பதால் தண்ணீரை திறக்கும்படி கேரள நெருக்கடி கொடுத்து வருகிறது. கேரள நீர்பாசன பொறியாளர் லத்திகா அணையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
இதை தொடர்ந்து தேனி கலெக்டரி பழனிசாமி, மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் அஜித்குமார் பாட்டீல் ஆகியோருக்கு தமிழக பொது பணித்துறை அதிகாரிகள் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் தகவலை தெரிவித்திருக்கின்றனர். இதன் காரணமாக தேனி, இடுக்கி மாவட்டங்கள் பதட்டத்தில் இருக்கின்றன.

கேரளா அமைச்சரவை கூட்டம்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 7,342 மி.கனஅடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கேரள அமைச்சரவை இன்று கூடுகிறது.












Click it and Unblock the Notifications