சென்னையை சுத்தப்படுத்த களமிறங்கிய நடிகர் சங்கத்தினர்... அனைவரும் களமிறங்க கார்த்தி அழைப்பு
சென்னை: மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தால் மட்டுமே விரைவில் பரவயிருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அளிக்கும் பணியில் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள் தொடங்கிய பணியில் பல நடிகர் நடிகைகள் இணைந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

நடிகர்களின் நிவாரண பணி
நடிகர் சங்க உறுப்பினர்கள் விஷால், கார்த்தி, வரலட்சுமி, சாந்தனு, ரமணா, கோவை சரளா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தியாவசிய தேவைகள்
கார்த்தியும் விஷாலும் வட சென்னைக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையை அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பினர். மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், துணிகள் போன்ற பொருட்களை பேக் செய்து கொடுத்து வந்தனர்.

சுத்தம் செய்யும் பணி
சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்ட நிலையில் திரைப்பட நடிகர்களும் சுத்தம் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர்.

கார்த்தி - ஆர்யா
எழும்பூரில் உள்ள பூபதி நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை திரைப்பட நடிகர்கள் பலர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தலைமையில் நடிகர்கள் ஆர்யா, பிரேம் குமார், ஜே.கே. ரித்தீஸ், வரலட்சுமி உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பனிகளை மேற்கொண்டுள்ளனர்.

களத்தில் இறங்குங்கள்
அரசை மட்டும் நம்பாமல் பொதுமக்களும் தங்கள் பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்ற முன் வர வேண்டும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்தார். மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்ய முன் வரவேண்டும்.

நம்மை நாமே பாதுகாப்போம்
குப்பைகளினால் நம்மை தாக்க இருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்தாக வேண்டும். அரசாங்கத்தால் அனைத்து இடங்களிலும் விரைவாக சுத்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே என்றும் கார்த்தி கூறியுள்ளார்.

கேமராவும் போலீஸ் பாதுகாப்பும்
நடிகர்கள் சுத்தம் செய்ய வந்தது நல்ல விசயம்தான். இதைப்பார்த்து அவர்களின் ரசிகர்களும் சுத்தப்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். அதே நேரத்தில் நடிகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஏராளமான போலீசாரும், நடிகர்களை படம் பிடிக்க வந்த தொலைக்காட்சி கேமராக்களும்தான் சற்றே உறுத்தலான விசயமாக இருக்கிறது.
இதேபோல எத்தனையோ தன்னார்வலர்களை படம்பிடித்து அவர்களின் சேவையை மக்களுக்கு தெரிவிக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications