உலக நாடுகளில் தண்ணீர் பஞ்சம்! அட்சய பாத்திரத்தை தவறவிடும் தமிழகம்! நந்திவரம் ஏரியை பாருங்க
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் ஏரியில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் மழை நீர் தேங்காமல் வறட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
மழை காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி வைத்தால் அது வறட்சி ஏற்படும் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் என்பதால்தான் ஆதி காலங்களில் இருந்து மக்கள் கிணறுகள், குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்து பயன்படுத்தி வந்தன.

ஒரு காலத்தில் நீராதாரமாக இருந்து வந்த நீர் நிலைகளில் மக்கள் இயற்கை உபாதை கழிப்பது, குளிப்பது, துணி துவைப்பது, ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவது என்பதால் தண்ணீர் அசுத்தமாகி அது குடிக்க லாயக்கற்ற நிலைக்கு சென்றுவிட்டது.
எனினும் இந்த நீர் நிலைகளால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் வீடுகளுக்கு போர், கிணறு உள்ளிட்டவைகளில் எடுக்க எடுக்க தண்ணீர் இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. பல இடங்களில் போர் போடும் போது 100 அடியை தாண்டினாலும் தண்ணீர் இருப்பதே இல்லை. இதனால்தான் மழை காலம் வருவதற்கு முன்னர் நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வைத்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் என்றால் பல நீர் நிலைகள் குப்பைகளை கொட்டும் இடமாகவும் அவற்றை எரிக்கும் இடமாகவும் மாறிவிட்டன. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீடுகளை சுற்றி வெள்ளம் வந்துவிடுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நந்திவரம் ஏரி. இது கூடுவாஞ்சேரி- காரணைபுதுச்சேரி இடையே உள்ளது. இந்த ஏரியில் மலை போல் குவிந்திருக்கும் குப்பை குறித்து Trilok chronicles என்ற ட்விட்டர்வாசி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: பல்வேறு நாடுகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் வறட்சியில் வாடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நீராதாரங்கள் எல்லாம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் தமிழகம்தான். கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரம் ஏரியில்தான் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டு மழை நீர் வீணாகிறது. அது போல் அங்கு குப்பைகளையும் எரிக்கும் சூழலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு காலத்தில் அந்த ஏரி அத்தனை அழகாக இருந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை போல் புதிய ஜீவராசிகளுக்கு புகலிடமாகவும் பறவைகளுக்கு இருப்பிடமாகவும் இருந்து வந்தது.
அந்த ஏரியில் தாமரையும் அல்லியும் மலர்ந்து காணப்பட்டது. இந்த அழகிய சூழலை இன்றும் ஏரியின் மைய பகுதியில் காணலாம். ஆனால் ஏரியின் ஓரங்களில் குப்பைகளை மக்கள் கொட்டியுள்ளனர். ஏரியை தூய்மையாக வைத்திருக்க அரசும் மக்களும் தவறிவிட்டனர். மக்கள் இந்த இடத்தில் நேரடியாக குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
குப்பை கொட்டும் லாரிகளும் தங்கள் பங்கிற்கு குப்பைகளை ஏரியில் கொட்டி விட்டு செல்கிறது. இது ஏரியா இல்லை குப்பை மேடா என்பதை மறந்து மக்கள் இதை செய்கிறார்கள். மக்கள் குப்பைகளை எரிப்பதால் அதன் தடயம் அப்படியே இருக்கிறது. எனவே குப்பை கூளங்களை பாதுகாப்பாக கொண்டு போய் வேறு இடத்தில் சேர்க்க வேண்டும்.
நந்திவரம் ஏரி மட்டும் இல்லை , காரணைபுதுச்சேரியும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை, ஊராட்சியை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை, உள்ளூர் மக்கள்தான் சாலைகளில் கூட குப்பைகளை கொட்டியுள்ளனர். இதனால் காரணைபுதுச்சேரியின் முக்கிய சாலை சுருங்கி குப்பைகளாக காட்சியளிக்கிறது. இவ்வாறு அந்த நெட்டிசன் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications