சென்னை டூ குமரி வரை மூடப்பட்ட மெடிக்கல்கள்! பொதுமக்கள் கடும் பாதிப்பு.. இனி எப்போது திறக்கப்படும்?
சென்னை: ''ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும்'' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்தகங்கள் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடந்து வருகிறது.
ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் மெடிக்கல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த இடத்தில் இருந்து கொண்டு பலரும் ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்வதால் சிறிய மெடிக்கல் வைத்திருப்போர் வருவாய் இழப்பை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் தான் ஆன்லைன் மருந்து விற்பனை, போலி மருந்து விற்பனையை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து அகில இந்திய கெமிஸ்ட் மற்றும் மருந்து விற்பனையாளர் அமைப்பு (AIOCD or All IndiaOrganisation of chemists and Druggists) சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் போராட்டம்
அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தம் நடக்கிறது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்று ஆன்லைன் மருந்து விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முக்கிய மருந்தகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மருத்துவமனைகளோடு சேர்ந்து செயல்படும் மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன.
திருப்பத்தூரில் கடையடைப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மருந்து கடையடைப்பு போராட்டத்தில் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் கூறுகையில், ''ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.
போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் இளைஞர்களின் கலாசார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் மருத்துவ பரிந்துரை சீட்டு இல்லாமல் நாங்கள் மருந்துகள் விநியோகிக்கப்படுவதில்லை ஆனால் தற்போதைய இளைஞர்கள் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக மருத்துவ பரிந்துரைச்சீட்டு தயார் செய்து ஆன்லைன் மூலம் கருத்தடை மாத்திரைகளை வாங்கி சீர்கெட்டு போகின்றனர்.எனவே மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என கூறினர்.
திருவாரூர் - திண்டுக்கல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 1000க்கும் அதிகமான மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 55 மெடிக்கல்கள், பழனி புறநகர் பகுதிகளில் 45 மெடிக்கல்கள் அடைக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
தூத்துக்குடி போராட்டம்
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மருந்தகங்களை இன்று மூடி போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் மருந்தகங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்த கடை அடைப்பு போராட்டம் காரணமாக மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை இந்த போராட்டம் இருக்கும். அதன்பிறகு மெடிக்கல்கள் மீண்டும் திறக்கப்படும். அதேவேளையில் அம்மா மருந்தகம் மற்றும் தனியார் கார்ப்பரேட் மருந்தகங்கள் உள்ளிட்ட மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications