பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம்... தமிழக அரசு பரிசீலனை
சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றுவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட வரைவு பாடத்திட்டத்தை தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வரைவு பாடத்திட்டம் தமிழக அரசின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசும் பரிசீலனை செய்து வருகிறது.

தமிழக அரசு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தது. தற்போது நடைமுறையில் இருந்து வரும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 9 வருடங்கள் ஆகின்றன. இதன் காரணமாக பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திடம் வழங்கப்பட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டது.
நிபுணத்துவம் வாய்ந்த 3 ஆசிரியர்கள் அடங்கிய குழுவானது ஒவ்வொரு பாடத்திற்கும் நியமிக்கப்பட்டது. இதையடுத்து, பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திற்கு தலா 18 தலைப்புகளில் வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. மேலும், பாடத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்பதற்காக மாவட்ட தலைநகரங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து கருத்துகளும், ஆலோசனைகளும் ஏற்கப்பட்டன.
இதையடுத்து புதிய பாடத்திட்டத்திற்காக, தயாரிக்கப்பட்ட வரைவுப்பாடத்திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. அவற்றில் சிறந்த கருத்துகள் ஏற்கப்பட்டன. பின்னர் இந்த வரைவுப் பாடத்திட்டமானது தமிழக அரசின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் மாற்றப்பட்டால் 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications