தபால் நிலையங்களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் இதுவரை வரவில்லை: சென்னை அஞ்சலகத்துறை
தபால் நிலையங்களில் புதிய ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்பதால் பழைய நோட்டுக்களை மாற்ற குவிந்த பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
சென்னை: புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் இதுவரை வரவில்லை என சென்னை அஞ்சலகத்துறை கூறியுள்ளது. ரூ.100 நோட்டுக்களும் போதிய அளவில் கையிருப்பில் இல்லை என அஞ்சலகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. நவம்பர் 10 வியாழக்கிழமை முதல் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் தங்களின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார் மோடி. அதேநேரம், வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், பேருந்துகள், விமானச் சேவைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில விதிவிலக்குகளையும் அறிவித்தார்.

இன்று காலை முதலே பழைய பணத்தை மாற்ற வங்கிகளின் முன் மக்கள் குவிந்தனர். சென்னையில் உள்ள வங்கிகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன.
புதிய 500 நோட்டுகள் வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல வங்கிக் கிளைகளில் புதிய நோட்டுக்கள் வரவில்லை என்றும் பழைய 100 ரூபாய் சில்லறை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.
சென்னை மயிலாப்பூர், அடையாறு தலைமை அஞ்சல் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் மதியம் 1 மணிக்கு தான் புதிய நோட்டுக்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் இதுவரை வரவில்லை என சென்னை அஞ்சலகத்துறை கூறியுள்ளது. ரூ.100 நோட்டுக்களும் போதிய அளவில் கையிருப்பில் இல்லை என அஞ்சலகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல திருச்சி, மதுரை அஞ்சல் நிலையங்களிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications