பிளவா? எங்களுக்குள்ளா? ”நெவர்” - சொல்கிறார்கள் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்!
சென்னை: தமிழக தேர்தலை சந்திக்க இருக்கும் மக்கள் நலக்கூட்டணியில் பிளவு எதுவும் இல்லை என்று அக்கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தனர்.
நேற்று நான்காவது கட்டப் பிரசாரத்தை மக்கள் நலக் கூட்டணி தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக்கூட்டணியின் தலைவர்கள் பேசினர்.

பொதுக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்கள்.
அப்போது வைகோ, "தமிழகம் முழுவதும் நாங்கள் பிரசாரம் செய்து மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அதிகமாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது, ஊழலை ஒழிப்போம்.
அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணிக்கு தான் எழுச்சியுடன் மக்கள் கூட்டம் வருகிறது. இது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை எடுத்து காட்டுகிறது. வருகிற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறப்போவது உறுதி" என்று பேசினார்.

பின்னர் பேசிய திருமாவளவன், "தேசிய கட்சியான காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் தனித்து போட்டியிட முடியாத அவல நிலையில் தான் அந்த கட்சி உள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் எங்கள் கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது பலிக்காது.
மக்கள் நலக் கூட்டணி வலுவாக உள்ளது. எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. இந்த கூட்டணி கொள்கையால் உருவான கூட்டணி அ.தி.மு.க. தி.மு.க.வுக்கு மாற்றாக புதிய சகாப்தத்தை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி தொடங்கப்பட்டது. இப்போது இந்த கூட்டணிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு மற்ற கட்சிகள் பயப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக மது விலக்கை அமல்படுத்தி மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவோம்" என்று கூறினார்.

முத்தரன், "கடந்த காலங்களில் வைகோ, திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்கள் இவர்கள் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. நாங்கள் வலுவாக உள்ளோம். எங்கள் கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்" என்று கூறினார்.
கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வேளச்சேரி மணிமாறன், வேளச்சேரி பகுதி செயலாளர் சு.செல்வபாண்டியன், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் தாயகம் தங்கத்துரை, சோழிங்கநல்லூர் பகுதி ம.தி.மு.க. செயலாளர் இ.கோவிந்தராஜ், துணைச் செயலாளர் ரியல் ரஜினி ஜெ.சின்னவன், விடுதலை சிறுத்தை கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பெ.ரவிசங்கர், திருமாறன், சத்தியா, யாழினி, குமரப்பா, பகலவன், கார்த்திக், இளையா, அசோக், சீராளன், ராதாகிருஷ்ணன், பா.ஜான்சன், ந.சத்தியா, கோவளவன், க.மகேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications