8 ஆண்டுகளுக்கு பின் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்- அன்று தனபால்- இன்று அப்பாவு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 2017-ம் ஆண்டு சபாநாயகராக இருந்த தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது; 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சியான அதிமுக தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை என கூறி அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே சபாநாயகருக்கு எதிராக பேசினர்; எதிர்க்கட்சிகளான பாஜக, பாமக இவ்விவாதத்தில் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தன. இந்த தீர்மானம், வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

தமிழக சட்டசபையில் கடைசியாக 2017-ம் ஆண்டு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. 2017-ல் சபாநாயகராக இருந்தவர் தனபால். அப்போது முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டு இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என கூறி திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதனையடுத்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தின் முடிவில் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது குரல் வாக்கெடுப்பில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. துணை சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் இந்த விவாதத்தையும் வாக்கெடுப்பையும் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்; திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 97 எம்.எல்.ஏக்கள் மட்டும் வாக்களித்தனர். அப்போது ஓபிஎஸ் அணி அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு அது தோல்வி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications