ரெய்டு நடத்தி 2 வாரமாகியும் சிபிஐயால் எதையும் நிரூபிக்க முடியவில்லையே.. ப.சிதம்பரம் பதிலடி கேள்வி
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் மே-17 ம் தேதி சி.பி.ஐ.சோதனை நடத்தியது. இந்த நிலையில் சிதம்பரம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்.

சோதனை நடத்தி 2 வாரங்களாகியும் சி.பி.ஐ.யால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இல்லாவிட்டாலும் நான் தான் சி.பி.ஐ.யின் குறி. விதிகளின் படியே நிதித்துறை செயலாளர்கள் ஐ.என்.எஸ்.மீடியா நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளனர்.
அந்நிய முதலீட்டுமேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளை கார்த்திக் சந்திக்கவில்லை. என்னையோ எனது துறை அதிகாரிகளையோ, அரசு துறை சார்ந்த விஷயங்களை பற்றி பேச குடும்பத்தாருக்கு நான் அனுமதி வழங்கவில்லை. எனது குடும்பத்தில் யாரும் எனது முடிவை தாண்டி துறை சார்ந்த விஷயங்களில் அதிகாரம் செலுத்த முடியாது.
ஐ.என்.எஸ்.மீடியா நிறுவனம் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்டர்ஜிக் நிறுவனத்துக்கும் கார்த்திக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் இல்லை.
வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக அப்போது இருந்தவர் டி.சுப்பா ராவ். அவர் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராக்கப்பட்டார். இதையடுத்து அசோக் சாவ்லா தலைவராக பதவியேற்றார். அவர், இந்திய போட்டி கமிஷன் தலைவராக்கப்பட்டார். அதேபோல மற்ற இரு செயலர்களும் கவுரவம்மிக்க குடிமை பணியாளர்களாகும்.
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தை கலைக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications