பழனி முருகனை பார்க்க போறீங்களா.. இன்றும் நாளையும் ரோப் கார் சேவை ரத்து!
பழனி: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியே மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் பக்தர்கள் எளிதில் மலைக்கோயிலை அடைய ரோப் கார் சேவை, மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன. இந்த சேவையில் பயணம் செய்தால் விரைவாகவும், சுற்றுலா அனுபவத்தையும் கொடுக்கும்.
இதனால் பக்தர்கள் நடந்து செல்வதை விட இந்த ரோப் காரில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ரோப்கார் மூலம் அதிகமாக கோயிலுக்கு வருகிறார்கள்.
இந்த ரோப் கார் சேவையின் போது பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அது போல் வருடாந்திர பராமரிப்பு பணிகளும் நடைபெறும். அந்த காலகட்டத்தில் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில் இந்த மாத பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) ரோப் கார் வசதிகள் ரத்து செய்யப்படுகிறது.
எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்லலாம் என்றும் வரும் வியாழக்கிழமை முதல் ரோப் கார் வசதி வழக்கம் போல் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ரோப் கார் வசதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது. வண்ணமயமான கார்களில் பக்தர்கள் அமர்ந்து கொண்டு மலை அழகை ரசித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications