மூக்கு சிகிச்சை.. பறிபோன உயிர்! மயக்க மருந்தால் மங்கிய கனவு! சொந்த ஊருக்கு சென்ற நர்சிங் மாணவி உடல்!
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மூக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு உயிரிழந்த நிலையில், மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், பேச்சுவார்த்தையடுத்து மாணவிகள் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்ற 19 வயது மாணவி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கும் செவிலியர் பயிற்சி பள்ளியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மூக்கில் ஏற்பட்டிருந்த சதை வளர்ச்சி பிரச்சனைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக சீதாலட்சுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மருந்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரது உடல்நிலை மோசமானது.

திருச்சி அரசு மருத்துவமனை
இதையடுத்து மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். "சரியான சிகிச்சை அளிக்காததால் தான் மாணவி உயிரிழந்தார்" என்று குற்றம் சாட்டிய அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
செவிலியர் மாணவி
மருத்துவமனை முன்பாக நடைபெற்ற இந்த போராட்டம் பல மணி நேரம் நீடித்தது. மாணவிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மயக்கவியல் மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயக்க மருந்து
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் யாருடைய தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
உடல் ஒப்படைப்பு
இதையடுத்து மாணவிகள் மற்றும் உறவினர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் சீதாலட்சுமியின் உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசு மருத்துவமனை
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் உருவாகியுள்ளது. சாதாரண சிகிச்சைக்காக சென்ற இளம் மாணவி உயிரிழந்தது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனைகளில் மயக்க மருந்து செலுத்தும் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாணவியின் உயிரிழப்பு குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என்றும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications