ஆட்சியை நடத்த ஒரே தகுதி படைத்த முதல்வர் ஓபிஎஸ்- பொன்னையன்
காட்சிக்கு எளிமையான ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே முதல்வர் பதவிக்கு தகுதி படைத்தவர் என்று முன்னாள் நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்த பொன்னையன், காட்சிக்கு எளிமையான தொண்டர்களின் ஆதரவைப் பெற்ற
ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று என்று கூறியுள்ளார்.
எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் பொன்னையன். ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில் சில ஆண்டுகள் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக செய்தித் தொடர்பாளராக பொன்னையனை நியமித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தியாளர்களிடம் அதிகமாக பேசியவர் பொன்னையன். ஜெயலலிதா திடீரென மறைந்த போது ஊடகங்களால்
கடுமையான விமர்சனத்துக்குள்ளானார் பொன்னையன்.
சசிகலாவை படுதீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்தவர் பொன்னையன். அதுவும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா என்று கூறிய அவர் சின்னம்மா என்று
வாய்க்கு வாய் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் கலகக்குரல் எழுப்பி வெளியேறினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ஓபிஎஸ் அணிக்கு
சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவைத்தலைவர் மதுசூதனன் சென்றார். இன்று பொன்னையன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில்
நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரையும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை
என்றார். வாய்க்கு வாய் சின்னம்மா என்று கூறியவர் முதன் முறையாக அழுத்தமாக சசிகலா என்று கூறினார்.
அண்ணாவைப் போல எளிமையான முதல்வர் என்று திருக்குறளை உதாரணமாக காட்டி பேசினார் பொன்னையன். மக்கள் எளிதில் நெருங்கும் முதல்வர் என்றும்,
வர்தா புயலின் போது விரைந்து செயல்பட்டவர் என்றும் ஜல்லிக்கட்டு சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்றும் கூறினார்.
தொண்டர்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே இருக்கிறது. ஜெயலலிதா இரண்டு முறை தேர்வு செய்த முதல்வர்
ஓபிஎஸ் என்று பொன்னையன் கூறினார்.












Click it and Unblock the Notifications