பிளாஷ்பேக்... ஓ. பன்னீர் செல்வத்தின் "வசந்த" காலம்...!
சென்னை: அதுவரை சாதாரண அமைச்சராக இருந்து வந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் அமர்த்தியது தற்காலிக ஏற்பாடுதான் என்று 2001ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அறிக்கை மூலம் விளக்கினார் முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஜெயலலிதா.
முதல்வர் பதவியிலிருந்து விலகி, ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக அமர்த்திய பின்னர் முதல் முறையாக அவர் வெளியிட்ட அறிக்கை இது.
இந்த அறிக்கையில் பல விஷயங்களை விரிவாக அவர் விளக்கியிருந்தார். இது அதிமுகவினரின் மனதில் நம்பிக்கையூட்டும் விதமாக வெளியிடப்பட்டதாக அப்போது கருதப்பட்டது.

தற்காலிகம்தான்
அந்த அறிக்கையில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு தற்காலிக ஏற்பாடுதான். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள என் மீதான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும் வரை இந்த தற்காலிக ஏற்பாடு தொடரும். எனக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்களை நான் உறுதியுடன் சந்தித்து வெற்றி பெறுவேன்.

தீக்குளிக்காதீர்கள்
இந்த ஏற்பாடு காரணமாக அதிமுகவினர் விஷம் குடித்தோ, தீக்குளித்தோ தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் (அப்போது 3 பேர் தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தனர்). அவை எனக்கு ஏற்புடைய செயல்கள் அல்ல.

கோர்ட் தீர்ப்பை ஏற்று
கோர்ட் தீர்ப்பை மதித்து இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இதேபோல பன்னீர் செல்வமும் கருத்து தெரிவித்திருந்தார்.

தர்மத்திற்கு வந்த சோதனை
தர்மத்திற்கு வந்த சோதனை என்று ஜெயலலிதாவின் நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார் புதிய முதல்வரான ஓ.பன்னீர் செல்வம். அவர் விடுத்த அறிக்கையில், இது தர்மத்திற்கு வந்த சோதனை.

மீண்டும் வருவார் ஜெயலலிதா
இதிலிருந்து புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நிச்சயம் வெல்வார். ஜனநாயக முறையில் தேர்தலைச் சந்தித்து முதல்வர் பதவியில் மீண்டும் அமர்வார் என்று கூறியிருந்தார் பன்னீர் செல்வம்.

21 அமைச்சர்களுடன்
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 21 அமைச்சர்களும் அப்படியே ஓ பன்னீர் செல்வம் அமைச்சரவையிலும் இடம் பெற்றனர். 2 பேரின் துறைகள் மட்டும் மாற்றப்பட்டன. புதிய அரசு ஆட்சியைத் தொடங்கியது.

மோடிக்கு முன்னோடி... ஓ.பி.எஸ்.!
உண்மையில் ஒரு விஷயத்தில் நரேந்திர மோடிக்கே முன்னோடி ஓ.பன்னீர் செல்வம். நரேந்திர மோடியைப் போலவே ஓ பன்னீர் செல்வத்துக்கும் டீக்கடை தொடர்பு உண்டு.

டீக்கடை ஓனராக இருந்து....!
எப்படி நரேந்திர மோடி இளம் பருவத்தில் டீ விற்ற அனுபவம் கொண்டிருந்தாரோ அதேபோலத்தான் அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு வரை டீக்கடை அதிபராக இருந்த அனுபவம் கொண்டவர் பன்னீர் செல்வம். இன்றளவிலும் அவரது டீக்கடை பெரியகுளத்தில் சிறப்புற இயங்கி வருவதை பார்க்கலாம்.

இவரா முதல்வர்... ஆச்சரிய அலைகள்
ஆனால், அத்தனை பேர் மனதிலும் இவரா அடுத்த முதல்வர், யார் இவர், இவரை தமிழகத்தில் யாருக்குமே தெரியாதே என்ற கேள்விகள் சரமாரியாக எழுந்து விழுந்தன. காரணம், ஓ.பன்னீர் செல்வம் குறித்து அதிமுகவைத் தாண்டி யாருக்குமே தெரியாது என்ற நிலை அப்போது.

அதைத்தான் விரும்பினார் ஜெயலலிதா
ஆனால் ஜெயலலிதா அதைத்தான் விரும்பினார். இப்படிப்பட்டவர்தான் கையடக்கமாக இருப்பார், நமக்கு பின்னாளில் பிரச்சினை தர மாட்டார் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

"விநாயகரை விட முருகனே பெட்டர்"
"விவரம்" தெரியாமல், உலகத்தை் கஷ்டப்பட்டுச் சுற்றி வந்து ஞானப் பழம் கேட்ட முருகனை விட, படு "விவரமாக", தாய் தந்தைதான் உலகம் என்று நிரூபித்த விநாயகரைப் போன்றவர்களை அவர் விரும்பவில்லை. விவரமான சீனியர்களை முதல்வர் பதவியில் வைத்தால் முதலுக்கே மோசமாகி விடும் என்பதால் தன்னைத் தவிர வேறு யாரையுமே தெரியாத "அப்பாவி" ஓ.பன்னீர் செல்வத்தைத்தான் அவர் நம்பினார். முதல்வர் பதவியிலும் அமர்த்தினார்.

செப்டம்பர் 22ல் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதிதான் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானது. இன்று 13 ஆண்டுகள் கழித்து அதேபோன்ற ஒரு செப்டம்பர் மாதத்தில், கிட்டத்தட்ட 2001ல் நிலவிய அதே பரபரப்பில் தமிழகம் உள்ளது.

பன்னீர் செல்வத்தின் "வசந்த" காலம்
முதல்வரானதை நிச்சயம் பன்னீர்செல்வமே நம்பியிருக்க மாட்டார். காரணம், அவரிடம் முன்பை விட அதிக அளவில் ஜெயலலிதாவிடம் பணிவும், அதை விட அதிக அளவில் பயமும் காணப்பட்டது.

அம்மாவைக் கேட்காமல் தும்மல் கூட கிடையாது
ஜெயலலிதாவைக் கேட்காமல் எதையும் செய்யவில்லை. பன்னீர் செல்வம். கோப்புகளைக் கூட முதலில் ஜெயலலிதாவுக்கு அனுப்பி பின்னர்தான் அவர் பார்த்தார் என்று கூட அப்போது சொன்னார்கள்.

அதிகாரிகள் குழு கையில் பன்னீர் செல்வம்
மேலும் முதல்வருக்குக் கூடுதலாக சில புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கிட்டத்தட்ட பன்னீர் செல்வத்தின் வேலையைப் பாதி பார்த்தனர். கையெழுத்திடுவது மட்டுமே பன்னீர் செல்வத்தின் வேலையாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்த அதிகாரிகள் கூட ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.

முதல்வராக சட்டசபைக்குப் போகாத முதல் முதல்வர்!
பன்னீர் செல்வத்தின் பதவிக்காலத்தில் ஒரு முறை கூட அவர் முதல்வராக சட்டசபையில் அமர்ந்ததில்லை. சட்டசபைக் கூட்டமும் கூட கூட்டப்படவில்லை. இதன் மூலம் முதல்வர் பதவியில் இருந்தும் சட்டசபைக்குக் கூட போகாத முதல் முதல்வர் என்ற பெயரும் பன்னீர் செல்வத்திற்கு வந்து சேர்ந்தது.

ஐந்தரை மாத முதல்வர்
2001 செப்டம்பர் 21ம் தேதி முதல் 2002 மார்ச் 1ம் தேதி வரை முதல்வராக வலம் வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

மீண்டும் அமைச்சர்
2002 மார்ச் 2ம் தேதி மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். அந்த அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம் பெற்றார் பன்னீர் செல்வம்.
பன்னீர் செல்வத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!












Click it and Unblock the Notifications