விஜய் கட்சியில் ஓ.பி.ரவீந்திரநாத்? எங்கள் பிளான் இதுதான்.. உடைத்து பேசிய ஓ பன்னீர்செல்வம்
தென்காசி: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் கட்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இது தொடர்பாக மிக முக்கிய பதிலை அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவனின் 309வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள பூலித்தேவனின் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
எங்கள் திட்டம்: தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் அடுத்து நடக்கும் 2026 சட்டசபைத் தேர்தலுக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்கப்படும். 2026இல் அதிமுகவை ஒருங்கிணைந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் நிறுவப்படும். தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. எங்குப் பார்த்தாலும் கஞ்சா என்ற சூழலே இப்போது நிலவுகிறது" என்று சாடினார்.
கோவை கோவிலில் ‛பசு தானம்’.. ஓ பன்னீர் செல்வம் செய்ததை கவனிச்சீங்களா.. ஓபிஎஸ்ஸின் கணக்கு தான் என்ன?
தொடர்ந்து சென்னையில் பூலித்தேவருக்கு சிலை அமைப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ், "தலைநகர் சென்னையில் பூலித்தேவருக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை இருக்கிறது. இதற்காகத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம். சென்னையில் பூலித்தேவருக்கு சிலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பார்முலா 4 தவறு இல்லை: அண்டை மாநிலங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இதை ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டி உள்ளதாகவும், அதிமுக உரிமை மீட்புக் குழு சார்பாக இந்த விவகாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நடக்கும் நிலையில், இது குறித்த கேள்விக்கு, கார் ரேஸ் நடக்கவே கூடாது என்பது தவறான கருத்து என்றும் அது நல்லதல்ல என்றும் அவர் பதிலளித்தார்.

திட்டமிட்ட சதி: அதைத் தொடர்ந்து விஜய் அரசியல் குறித்துப் பேசிய ஓபிஎஸ், "விஜய் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடன் நான் எனது வாழ்த்தைத் தெரிவித்தேன். அவ்வளவு தான்.. ஆனால், அதை வைத்து ஏதோ எனது மகன் விஜய் கட்சியில் எனது மகன் இணையப் போவதாக எல்லாம் சிலர் திட்டமிட்டு தகவல் பரப்பி வருகிறார்கள். ஆனால், இது தவறான செய்தி. அது திட்டமிட்ட சதி" என்று பதிலளித்தார்.
ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் 2019 முதல் 2024 வரை தேனி தொகுதி அதிமுக எம்பியாக இருந்தவர்.. இடையில் அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்ட போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது ரவீந்திரநாத்தும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் ரவீந்திரநாத் போட்டியிடவில்லை. இந்தச் சூழலில் தான் அவர் விஜய் கட்சியில் இணையப் போவதாகத் தகவல் பரவியது. இருப்பினும், அதை இப்போது ஓபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications