அதிகாரி மிரட்டல்: சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை
ராமநாதபுரம்: அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் சண்முகவேலு வயது 57. ராமநாதபுரம் அரசு ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் திங்கட்கிழமையன்று திடீரென அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சக ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினர் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்துணவு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் மதிவாணன் என்பர்தான் சண்முகவேலு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என சண்முகவேலுவின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.
விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமை சண்முகவேலுவுக்கு போன் செய்த மதிவாணன், உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். வரவில்லை என்றால் கலெக்டரிடம் கம்ப்ளைண்ட் செய்து வேலையை காலி செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது பேரக்குழந்தைகளை வெளியூருக்கு அழைத்து சென்றிருந்ததால் சண்முகவேலு அலுவலகம் செல்ல இயலவில்லை என்று கூறப்படுகிறது. நிலையில் திங்களன்று காலை சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்கொலைக்கு காரணமான மதிவாணனை கைது செய்ய சொல்லி சண்முகவேலுவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சண்முகவேலுவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் அதிகாரியாக இருந்த முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சத்துணவுத்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications