கார்த்தி சிதம்பரத்தின் மனுவை நிராகரிக்க வேண்டும்- வருமான வரித்துறை அதிகாரி மனுவால் பரபரப்பு!
சிவகங்கை: லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுவில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பல தகவல்களை மறைத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவத்சவா நேரில் வந்து புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை லோக்சபா தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது பீகார் மாநிலம் பாட்னாவில் வருமானவரித்துறை ஆணையராக உள்ள ஸ்ரீவத்சவா, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ராஜாராமனிடம் நேரில் வந்து ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், கடந்த 5ந் தேதி சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ள அபிடவிட்டில் அவருடைய சொத்து விவரம் குறித்து தவறான தகவல் தெரிவித்துள்ளார். எனவே அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து விபரம் குறித்த அபிடவிட் மற்றும் 150 பக்க புகார் மனுவையும் அவர் அளித்தார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ஸ்ரீவத்சவா பல்வேறு குற்றச்சாட்டுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானவர். அந்த காழ்ப்புணர்ச்சியில் இதுபோல் மனு அளித்துள்ளார். இந்த சொத்து விபரம் குறித்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் கூறுகையில், மனுதாரர் அளித்த அபிடவிட் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications