பழைய குற்றாலம் வனத்துறை வசம் செல்கிறதா? அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்
தென்காசி: பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், இன்று அளித்த பேட்டியில், பழைய குற்றால அருவி பொதுப்பணித்துறை வசமே இருக்கும் என்று கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குற்றால அருவிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த குற்றால அருவிக்கு வருகை தருவார்கள். குற்றால சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். குற்றாலத்ததை பொறுத்தவரை பழைய அருவி, மெயின் அருவி, ஐந்தருவி என மூன்று அருவிகள் உள்ளன.

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மறக்காமல் இந்த அருவிகளில் குளியல் போட்டுவிட்டு செல்வார்கள். இந்த நிலையில், கடந்த மே மாதம் கோடை காலத்தில் பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குற்றால அருவியில் குளித்துக் கொண்டு இருந்த சிறுவன் அடித்து செல்லப்படதில் உயிரிழந்தான். இந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. வனத்துறையினரும் பழைய குற்றால அருவியை ஆய்வு செய்தனர். பழைய குற்றால அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதாவது, வனத்துறை அனுமதிக்கும் நேரத்தில், நாட்களில் மட்டுமே செல்ல முடியும்.
வனத்துறை தெரிவிக்கும் சுகாதார விதிகளை பின்பற்றி மட்டுமே உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்... வாகனங்களுக்கு, கெமிக்கல் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். ஏற்கனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பழைய குற்றால அருவியும் வனத்துறை கட்டுப்பாட்டில் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றால அருவியை கொண்டு செல்ல வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான், பழைய குற்றால அருவி வனத்துறை வசம் செல்லாது எனவும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications