இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஜி.கே.வாசனிடம் பதில் இருக்கிறதா...?
சென்னை: கடந்த வியாழனன்று தமிழக காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்தார் ஞானதேசிகன். அதனைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் உருவாகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதேசமயம் கைவசம் உள்ள ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் பாஜகவில் சேர்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தார். அனால், தனது முடிவு குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனி கட்சி அல்லது பாஜகவுடன் இணைவது என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு ஜி.கே.வாசன் முன் உள்ள கேள்விகள் சில...

முதல் கேள்வி...
கடந்த 1996ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமையிடம் மூப்பனார் வலியுறுத்தினார். அதை புறக்கணித்து, காங்கிரஸ் தலைமை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது. இதை தொடர்ந்து தான், தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் உருவாக்கினார்.
திமுகவுடன் கூட்டணி...
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டார். ரஜினி புண்ணியத்தால் பெரும் வெற்றியைப் பெற்றது சட்டசபையில் இந்தக் கூட்டணி.
1998ம் ஆண்டும் கூட்டு சேர்ந்த திமுக - தமாகா
அதேபோல 1998ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. அப்போது, பா.ஜ.க - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வாஜ்பாய் கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமர் ஆனார்.
மூப்பனாரின் முடிவு....
ஓராண்டில், வாஜ்பாய் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள, அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கலாம் என, ப.சிதம்பரம், மூப்பனாரிடம் வலியுறுத்தினார்.
பாஜகவுக்கு எதிரான மூப்பனார்
ஆனால், 'மதசார்பற்ற தன்மையுடன்கட்சியை ஆரம்பித்து விட்டு, மதசார்புள்ள கட்சியின் ஆட்சி நிலைக்க உதவ மாட்டேன்' என சொல்லி, பா.ஜ.க, ஆட்சிக்கு எதிராக த.மா.கா., உறுப்பினர்களை ஓட்டளிக்க செய்தார் மூப்பனார். அதன்படி பார்த்தால் இப்போது மூப்பனாரின் முடிவிற்கு மாறான ஒன்றை எப்படி நியாயப்படுத்துவது?
2வது கேள்வி...
காங்கிரசுக்கே ஆதரவு குன்றியுள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தால் கணிசமான தொண்டர்களுடன் தங்களது பலத்தை காட்டுவது சிரமம். இந்த நிலையில், தனி கட்சி ஆரம்பித்து தி.மு.க. - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முற்பட்டால், வாசன் கட்சிக்கு கவுரவமான அளவில் சீட்கள் ஒதுக்கப்படுமா?
திருமாவளவன் ரேஞ்சுக்கே சீட் கிடைக்கும்
அப்படியே வாசன் தரப்பு தனிக் கட்சி கண்டு, திமுகவுடன் கூட்டணி வைத்தால் திருமாவளவன் கட்சிக்கு கொடுப்பது போலவே ஒன்று அல்லது இரண்டு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
3வது கேள்வி...
காங்கிரஸிற்கு தற்போது கிடைக்கும் கொஞ்சநஞ்ச ஓட்டுகளும் தீவிர காங்கிரஸ்வாதிகளுடையது தான் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாசன் பா.ஜ.க.வுடன் கை கோர்த்தால் இந்த ஓட்டுகளும் கிடைக்குமா?
கடைசிக் கேள்வி...
தற்போதைய சூழலில் வாசன் பா.ஜ.க.வுடன் இணைந்தால், தற்போது உள்ள ஆதரவாளர்களுக்கு அந்த கட்சியில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படும்? குறிப்பாக இவ்வளவு காலமாக எதிர்ப்பு கட்சியில் இருந்தவர்களுக்கு பா.ஜ.கவில் வரவேற்பு இருக்குமா?
ஆனால் காங்கிரஸுக்குப் பாதிப்பு கன்பர்ம்ட்
எது எப்படியோ, ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு விலகினால் கட்சிக்கு நிச்சயம் நல்ல பலவீனம் ஏற்படும் என்பது உறுதியாக நம்பப்படுகிறது. காரணம், தொண்டர்களாகட்டும், நிர்வாகிகளாகட்டும், மூப்பனார் காலத்திலிருந்து அவருக்கும், அவரது மகன் வாசனுக்கும் ஆதரவானவர்கள் பாதிப் பேர் உள்ளனர் என்கிறார்கள். எனவே வாசன் விலகினால் அது நிச்சயம் காங்கிரஸை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் பலமானவராக திகழ முடியுமா என்பதும் ஒரு சந்தேகத்துக்குரிய முக்கியக் கேள்வி என்பதையும் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications