பன்றி காய்ச்சலால் ஒருவர் பலி.. திருப்பத்தூர் பகுதியில் அதிர்ச்சி.. ‘மாஸ்க்’ அவசியம்: பரபர ஆர்டர்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் வசித்து வந்த பகுதியில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை நடத்தத் தயாராகி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் நியூ டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்னர் தீவிர காய்ச்சல் இருந்து வந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமாருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வாணியம்பாடி நகராட்சியில் ரவிக்குமார் மளிகைக்கடை நடத்தி வந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் 5 நாட்கள் திறக்க வேண்டாம் என்றும், அப்பகுதி சாலைகள் அனைத்தும் சுத்தப்படுத்தவும் சுகாதர ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி முழுவதும் தூய்மைப் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மருத்துவக் குழுவினர், ரவிக்குமார் வசித்து வந்த பகுதிக்குச் செல்ல உள்ளனர். அப்பகுதி மக்களுக்கு பன்றி காய்ச்சல் சோதனை நடத்த உள்ளனர். அப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications