அவன் எனக்கு தாயுமானவன்.. வாசகர்களின் தந்தையர் தின மடல்கள்.. பகுதி 4

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகெங்கும் இன்று தந்தையர் தினம் கொண்டாடாப்படுகிறது. நாமும், நம் வாசர்களும் கடந்த சில நாட்களாகவே இதை உணர்வோடு கொண்டாடி வருகிறோம். இன்னும் இன்னும் குவிந்தபடி இருக்கிறது வாசகர்களின் மடல்கள்.

ஒவ்வொரு மடலும் உற்சாகம் தருகிறது, நெகிழ வைக்கிறது, மகிழ்ச்சியூட்டுகிறது. அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல, ஒவ்வொரு மடல் தரும் அன்பும், பாசமும், பொங்கியபடி இருக்கிறது.

நமக்கு வந்த மடல்களின் அடுத்த தொகுப்பு....

தாயுமானவன் - சிங்கப்பூர் அனுராதா

அப்பாவுக்கு, திருக்குறள் மேல் உள்ள அவர் ஆர்வம் என்னை வியக்க வைக்கும். தாத்தா அவரை சட்டம் படிக்க வைத்தார். என் அப்பா உயர் நீதிமன்ற வேலையாக சென்னை செல்வார், திரும்ப வந்ததும் என்ன வாங்கி வந்து இருக்கிறார் என ஆர்வமாக பெட்டியை பார்த்தால், புத்தமாக நிறைந்து இருக்கும். எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்கும். அப்பாவுக்கு, புத்தகம் என்றால் கொள்ளை பிரியம்.

திருப்புகழ், தேவாரம், சுய முன்னேற்ற புத்தகங்கள், அறிவியல் ஆராய்ச்சி, நபிகளின் பொன் மொழிகள், ஏசுபிரானின் பொன்மொழிகள், சித்த வைத்தியம், கை வைத்தியம் என எல்லா பிரிவுகளிலும் புத்தகம் அடுக்கி இருக்கும். எங்கள் வீட்டு வரவேற்பறையில், சிறிய புத்தக நிலையமே இருக்கிறது. எங்களை அடிக்கடி "படிங்க..படிங்க "என்பார்..இம்கும்..நாங்கெல்லாம் இப்பயே அப்படி...அப்ப கேக்கவா வேணும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொழுது சிறிது படிப்பேன்.

Oneindia Tamil readers's tributes to their fathers

மதம் தாண்டி அவர் எண்ணங்கள் இருக்கும், நபிகளின் பொன்மொழிகள் என்னை மிகவும் கவர்ந்தவை,

"கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்."

"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது."

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்."

"குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்."

" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்."

"தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது."

இவையெல்லாம் என் தந்தை, புத்தகம் மூலமாக எனக்கு கற்று கொடுத்தவை.

எனக்கு பிடித்த ஏசுபிரானின் பொன்மொழிகள்,

"உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்."

" உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

" மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்."

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்." - என்னை சிந்திக்க வைத்த பொன்மொழிகள்

அப்பா மூன்று மணி நேரம் கூட தூங்க மாட்டார். எப்பொழுதும் படித்து கொண்டே இருப்பார். "கற்றது கை மண் அளவு ..கல்லாதது உலக அளவு" என்பார்.

நீங்கள், உங்கள் பிள்ளைக்கு அளிக்கும் மிக உயர்ந்த பரிசு, ஒரு நல்ல புத்தகமாக இருக்கட்டும். காலத்திற்கும் அழியாத பரிசாகவே இருக்கும் என்பார்

தாயுமானவன்!

தூக்கம் மறந்த வேளையிலே..
கதை..சொல்லி..தூங்க வைத்தான்..
அவன் தாயும்... அல்ல..

கைபிடித்து ..
வழி நடத்தினான்..
அவன் என் பாதுகாவலனும் அல்ல..

படிக்க மறந்த வேளையிலே..
கல்வி கற்று கொடுத்தான்..
அவன் என் ஆசானும் அல்ல..

கஷ்டம் வந்த வேளையிலே..
கை கொடுக்க ஓடி வந்தான்..
அவன் கடவுளும் அல்ல..

கடைசிவரை நான் இருக்கேன் என்றான்
என் காதலனோ.. கணவனோ..அல்ல..

அவன் எல்லாவற்றிற்கும் மேலானவன்..
என் தகப்பன்... அவன் எனக்கு தாயுமானவன்..

அப்பாவை ஐய்யா என அழைக்க சொல்லி எங்க அம்மா சொன்னதாக அக்கா சொல்வார். இன்றும் ஐய்யா என்று தான் அழைப்போம்.

ஐயா உங்களுக்கான பதிவு இது

I MISS YOU AYYA!

ஜி.சீனிவாசன் - மேற்கு மாம்பலம், சென்னை

அப்பா...
பாசத்தைச் சொல்வதில்லை
பகிர்ந்து தான் பழக்கம்
சோகத்தை உள்ளடக்கி
சுமப்பதே வழக்கம்

தானிழந்த சொர்க்கத்தை
தரத்துடிக்கும் ஏக்கம்
தன்உரிமை சொல்வதற்கும்
எத்தனை நாள் தயக்கம்
மனதாரச் சசொல்வதில்லை
மறைமுகமாய் ரசிக்கும்
அப்பாவை இழந்ததற்கு
அப்பால் தான் பிடிக்கும்

ஸாரி அப்பா... செல்லம் பிரபாகரன்

என் அப்பா பெயர் முத்தையா.. ரொம்ப அமைதியா பாசமா இருப்பார். ஆனால் எனக்கு அவர் மேல் எப்பயும் கோபமும் வெறுப்பும் தான் இருக்கும். ஏன்னா அவரு குடிப்பாரு. வீட்டுல சண்ட போடுவாரு. ஆனா என் அப்பாவ பத்தி தனிமைல யோசிக்கும் போது அவர் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் இதுனால தான் அவர் குடிக்கு அடிமையானாரு. எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல சொந்த வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ நீ மத்தவ கிட்ட என் மகன் லட்சாதிபதி அப்டினு சொல்ற. இதெல்லாம் நீ சம்பாதித்தது அப்பா. இன்னும் ரொம்ப கஷ்ட படுற என்னால தான். எனக்கும் ஆசை தான் அப்பா. உனக்கு ஓய்வு அளிக்கனும்னு. ஆனா என்னால முடில அப்பா ஸாரி. ஆனா கூடிய சீக்கிரம் உனக்கு ஓய்வு அளிப்பேன் அப்பா. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துரேன் அப்பா ஸாரி ஸாரி.

தந்தையின் தியாகங்கள்.... அப்துல் லத்தீப், துபாய்

தாயின் பெருமை போற்றுதலுக்குரியதே. அதே சமயம் தாயின் பெருமையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நம் சமூகத்தில் தந்தை என்ற புனிதமான உறவு தாயை உயர்த்தும் சாக்கில் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். தந்தைமார்களின் பெருமையையும், தியாகத்தினையும் சற்று நம்முன்னே கொண்டு வருவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

உள்ளத்தில் பாசத்தையும், உருவத்தில் கோபத்தையும், பேச்சில் கடினத்தையும் கொண்டவன்தான் நம் தமிழ்ச்சமூகத்தின் தந்தைமாராக இருக்க முடியும். ஆம் அப்படித்தான் அவர்கள் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஒரு தந்தை அப்படிகடினமான பேச்சினைக் கொண்டவனாக இருந்தால்தான் தம்பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்க முடியும் என்று நம்சமூகம் நம்புகிறது. முடிவு... தன் குடும்பத்திற்காக வாழ்க்கைமுழுமையும் தியாகம் செய்யும் ஒரு தந்தை தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான பெருமையையும் புகழையும் கூட தியாகம் செய்து விடுகிறான்.

அலுவலக வேலைப்பளு, மன அழுத்தம், உடற்கூறுவலிகள், சமூகப் பிரச்சனைகள், சுற்றுப்புற இடர்பாடுகள் இவைஎல்லாம் சகித்துக்கொண்டு தன் நலன் முக்கியம் அல்ல, தன்குடும்பம், தாய், தந்தை, மனைவி, மக்கள் நலன் ஒன்றே போதும்என்றும், போதாக்குறைக்கு தன் சமூக நலனையும் கருத்தில்கொண்டு வாழ்கிறானே அவனை தியாகி என்று சொன்னால் நம்சமூகம் குறைந்துவிடுமா என்ன? ஆனால் அப்படி நாம்சொல்லமாட்டோம். ஏன் தெரியுமா தந்தையானவன் இரும்பு உள்ளத்தையும், எஃகு உடலையும் கொண்டவன் என்று தானே நாம் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு தந்தையானவன் எவ்வளவு இளகிய மனம் படைத்தவன் என்ற ஓர் ஆய்வின் முடிவினை ஒரு கட்டுரையில் நான் படித்ததை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டியது முக்கியம் எனக் கருதுகிறேன். ஒரு மனைவி கர்ப்பமாகி அவள் குழந்தைபிரசவிக்கும் நேரத்தில் தன் மனைவி மற்றும் தன் குழந்தையின்உயிரை கருத்தில் கொண்டு மனதளவில் அவள் கணவனும் பிரசவ வலி அடைகிறான் என்கிறது அந்த ஆய்வு.

பொதுவாக தாயானவள் நெஞ்சில் வைத்துதான் பிள்ளையை கொஞ்சுவாள். ஆனால் தகப்பன் தன் தோளில் ஏற்றி வைத்து பிள்ளையை கொஞ்சுவான். ஏன் தெரியுமா? அப்போது தன் பிள்ளை தன்னைவிட உயரத்தில் இருக்கும், தான் பார்க்காத உலகத்தையும் தன் பிள்ளை பார்த்து விட வேண்டும் என்பதன் பால அர்த்தம்தான் அது..

இந்த அளவுக்கு பாசமிகுந்த தந்தையை அந்த குழந்தைஎப்படி கருதுகிறது தெரியுமா? ஒன்று மிரட்டுவார் அல்லது பணம் தருவார் அதாவது நம் கிராம பாஷையில் சொன்னால் ஒன்று பூச்சாண்டி அப்படி இல்லை என்றால் ATM மிஷின். நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. நாம் உணர்ந்து இருக்கின்றோமா இல்லையா? வெளிநாடுகளில் வாழும் தந்தைமார்கள் என்றால் நிலைமை இன்னும் மோசம். நினைவுகளில் பாதி கனவுகளில் மீதி கதைதான் அவர்கள் வாழ்க்கை. மணமானவர்களின் பர்சை பார்த்தால் புரியும். அனைவருடைய பர்சிலும் பணம் இருக்கிறதோ இல்லையோ தன் மனைவி மக்களின் ஃபோட்டோ இருக்கும்.

தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தன் பிள்ளைகளின் குரல் கேட்டு சிலிர்க்கும் தந்தைமார்களே அதிகம். வரும் காற்றில் வாசம் இருக்கிறது ஆனால் வெறும் வாசம் மட்டுமே வாழ்க்கை ஆகாது என்று தெரிந்தும் தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் வெளி நாடுவாழ் தந்தைமார்களே மற்றும் ஒட்டு மொத்த தந்தைமார்களே யார் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன நீங்கள் இப்பூவுலகின் தியாகிகள்தான். இந்த தியாகத்தின் வாசம் நம் ஆழ்மனதில் தென்றலாய் வீசி நம் உள்ளுணர்வில் உணரும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறதே......அப்பப்பா அதுபோதும் இந்த பூமியே தந்தாலும் வேண்டாம்....

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்றுதான்நாம் படித்து இருக்கின்றோம்... இல்லை இல்லை அது தவறு.... தந்தை சொல் இல்லை என்றால் மந்திரமே இல்லை அதுதான் சரி. தான் பிள்ளைப் பெற்று தந்தையாகிவிட்ட போதும் தன்வயதான தாய் தந்தையரையும் அன்புடனும் பரிவுடனும்பார்த்துக்கொள்ளும் தந்தைமார்களே உங்கள் அன்புக்கும், பரிவுக்கும், தியாகத்திற்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம். இந்தபூவுலகில் நீங்கள் பிறந்ததற்கு அர்த்தம் உண்டு. ஏன் இந்தபூவுலகுக்கே உங்களால்தான் அர்த்தம் உண்டு. எல்லாம் வல்லஇறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+