போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படாது: முதல்வர் அறிவிப்பு
சென்னை: மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியில், இப்போது 41.28 அடி மட்டுமே நீர் உள்ளது. இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு, குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து விட இயலாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணை திறக்கப்படாமல் போனாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஏழு அம்ச நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
அவற்றின் விவரம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கியது போன்று, இந்த ஆண்டும் விவசாயத்துக்கு 12 மணி நேர தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
நீர் ஆதாரங்களில் இருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில், 600 அடி குழாய்கள், 7 ஆயிரம் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
டெல்டா பகுதிகளில் காவிரி நீர் பெறப்படும்போது, வாய்க்கால் பாசனம் மூலம் அதிக அளவு நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் 100 சதவீத மானியத்தில் சமுதாய நாற்றங்கால் முன்னரே அமைக்கப்படும். வாய்க்கால்களில் நீர் பெறப்படும் சமயத்தில் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நெல் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்டா பகுதிகளில் 100 சதவீத மானியத்தில் நெல் நடவு இயந்திரங்களை 200 விவசாயிகள் குழுக்களுக்கு வழங்கி, நடவுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலையாள்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் சரியான தருணத்தில் களையெடுத்து உயர் மகசூல் பெற வழிவகை செய்யும் வகையில், 100 சதவீத மானியத்தில் இயந்திரக் களையெடுக்கும் கருவிகள் 200 விவசாயக் குழுக்களுக்கு வழங்கப்படும்.
குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் உயரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உயர் மகசூல் தரும் இடுபொருள்களான நெல் நுண்ணூட்டக் கலவை, துத்தநாக சல்பேட் ஆகியன தலா 1 லட்சம் ஏக்கர் பரப்புக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
உயிரி உரங்கள் மற்றும் திரவ உயிரி உரங்கள் தலா 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு 100 சதவீத மானியத்திலும், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு ஜிப்சம் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்படும்.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ரூ.32.95 கோடி செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications