அதிமுகவில் இருந்து நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் களையெடுக்கப்பட்ட பின்னணி
சென்னை: அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் நால்வர் அணியில் உள்ள முக்கிய தலைவர்களான அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கட்சியில் அதிகமாக அதிகாரம் செலுத்தியது, எம்.எல்.ஏ சீட் வாங்கித்தருவதாக பண வசூலில் இறங்கியதுமே பதவி பறிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மூலவர் ஜெயலலிதா என்றால், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் ஆகிய நால்வர்தான் பரிவார தெய்வங்கள். கட்சியில் எந்த நல்லது கெட்டது என்றாலும் இவர்கள் நால்வரைத்தாண்டித்தான் மூலவரை எட்டும்.
நால்வரில் பணிவுக்கு பெயர்போன ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதனின் செல்வாக்கு அபரிமிதமானது. அதிலும் தனக்குப் பின்னர் முதல்வராக தகுதிவாய்ந்தவர் என்று ஜெயலலிதா நம்புவது ஓ.பன்னீர் செல்வத்தைத்தான். இப்போது இந்த இரண்டு அமைச்சர்கள் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ஜெயலலிதா.
இதன் எதிரொலியாகவே தென் சென்னை தெற்கு மாவட்டம், வேளச்சேரி பகுதி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.அசோக் எம்எல்ஏ, அதிமுக மீனவர் பிரிவு துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ரமேஷ், தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்லப்பட்டி எம்.முருகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் பொறுப்பில் இருக்கும் வரகூர் அ.அருணாசலம், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர செயலாளர் பொறுப்பில் இருந்து கே.மாரியப்பன் ஆகியோர் கடந்த வாரம் முதல் அவரவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதனின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களாம்.

நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்
பழனி நகர செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.மாரியப்பன், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளர். பழனி நகர செயலாளராக தாராபுரத்தை சேர்ந்தவரும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான வேணுகோபால் இருந்தார். தாராபுரத்தை சேர்ந்த ஒருவர் எப்படி பழனி நகர செயலாளராக இருக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன் பிரச்னை எழுப்பினாராம்.

பதவிச் சண்டை
இதனால் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் இருவருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதத்துக்கு முன் வேணுகோபாலின் நகரச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, மாரியப்பனுக்கு பழனி நகர செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

கட்சியில் அதிகாரம்
அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக இருந்து, அண்ணா தொழிற்சங்கத்தில் பதவியை பிடித்த மாரியப்பன், நகர செயலாளர் பதவி கிடைத்த உடன் எம்.எல்.ஏ ரேஞ்சுக்கு அதிகாரம் செய்தாராம். இவருக்கு பதவி கிடைத்ததும், கட்டப்பஞ்சாயத்து, வேலை தருவதாக கட்சிக்காரர்களிடம் பணம் பறித்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர் மாரியப்பன் நீக்கப்பட்டு துணை செயலாளராக இருந்த வி.முருகானந்தம், பழனி நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் மூன்றாம் இடம்
பவர் மினிஸ்டராகவும் அதிமுகவில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனின் பி.ஏவினால் கடந்த சில மாதங்களுக்கு சர்ச்சை ஏற்பட்டது. இப்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் அதிகரித்து வருவதாலேயே சமீப காலமாக கட்சியில் இருந்து விஸ்வநாதன் ஓரங்கட்டப்பட்டு வருகிறாராம். முதற்கட்டமாக அவரது ஆதரவாளரும், பழனி நகரச் செயலாளர் மாரியப்பனின் பதவியை பறித்துள்ளார் ஜெயலலிதா என்கின்றனர்.

மருமகன் நாட்டாமை
நத்தம் விஸ்வநாதனின் மருமகனின் ஆதிக்கமும் கட்சியில் அதிகமாகிவிட்டதாம். விஸ்வநாதனின் மருமகன்தான் தற்போது நிழல் அமைச்சராக வலம் வருகிறாராம். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பிளெக்ஸ் பேனர்களில் நத்தம் விஸ்வநாதனின் படங்களும், அவரது மருமகன் கண்ணன் படங்களும் இடம் பெற்றிருந்ததாகவும் திண்டுக்கல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகவே ஆதரவாளர்களின் பதவியை பறித்துள்ளாராம் ஜெ.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தட்டி வைப்பு
இதேபோல கட்சியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஒ.பன்னீர் செல்வத்தில் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ சீட் வாங்கித்தருவதாக கூறி பணம் வசூல் செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸ் வலதுகரம்
அதிமுக மீனவர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ரமேஷ், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வலது கரமாகவும், ஆல் இன் ஆல் ஆகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் செல்லும் காரில் இவர் ஒரு ஆள்தான் சொல்லாமல் ஏறுகிறவர். இவரை பன்னீர்செல்வத்தால் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு செல்வாக்காக இருந்தார். சென்னை, மயிலாப்பூர் எம்எல்ஏ ராஜலட்சுமியின் உதவியாளராகவும் இருந்து வருகிறார்.

அசோக் எம்.எல்.ஏ
அதேபோன்று, சென்னை, வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ எம்.கே.அசோக் வகித்து வந்த தென்சென்னை தெற்கு மாவட்ட வேளச்சேரி பகுதி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளையொட்டி வேளச்சேரி முருகன் கல்யாண மண்டபத்தில் 668 பேருக்கு ஜெயலலிதா படத்தை பச்சைகுத்தும் விழாவை நடத்தினார்.

பச்சைக் குத்தாத அதிமுகவினர்
இதற்காக வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களை அழைத்து வந்தார். இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர்களை பச்சைகுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஒருவரும் பச்சை குத்த முன்வராமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

கடும் விமர்சனம்
அதேபோன்று ஓ.பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக இருந்த டி.ரமேசும் அங்கு வந்திருந்தார். அவரை பச்சை குத்தும்படி அங்கிருந்தவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர் கிண்டலாக ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சிறுமிக்கு அமைச்சர்கள் முன்னிலையில் கதற கதற பச்சைக் குத்தப்பட்டது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

கட்சிப்பதவி பறிப்பு
அசோக் எம்எல்ஏ ஏற்பாடு செய்த பச்சைகுத்தும் நிகழ்ச்சி, கிண்டலாக பல பத்திரிகைகளில் வெளியானது. முதல்வர் ஜெயலலிதாவால் நேரடியாக நன்மை பெறுகிறவர்கள் யாரும் பச்சை குத்திக்கொள்ளாமல், ரூபாய் கொடுத்து அதிமுக அப்பாவி தொண்டர்களை பச்சைகுத்த வைக்கிறார்கள் என்று அங்கிருந்தவர்கள் பேசினார்கள். இதுபற்றிய செய்தி வந்ததாலேயே அசோக் எம்எல்ஏவின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பண வசூல்
கட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பதால் சட்டசபை தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக கூறி ஓபிஎஸ் குடும்பத்தினர் பண வசூலில் இறங்கியுள்ளனர். இதில் எல்லைப்பட்டி முருகன், அசோக் ஆகியோர் படு ஜோராக பண வசூலில் இறங்கியதாகவும் ஜெயலலிதாவிற்கு தகவல் தெரியவரவே உடனடியாக பதவி பறிக்கப்பட்டதாம். சிட்டிங் எம்.எல்.ஏ அசோக்கிற்கு வருகிற சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் கிடைக்கவும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

களையெடுப்புகள் தீவிரம்
சட்டசபை தேர்தலில் நால்வர் அணி தேர்வு செய்பவர்களுக்கு சீட் நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில் ஒபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் ஆட்கள் களையெடுக்கப்பட்டு வருவது அதிமுகவில் சிலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கட்சியில் மேலும் பலர் களையெடுக்கப்படலாம் என்று கூறப்படுவதால் எம்.எல்.ஏ சீட்டுக்காக இவர்களை நம்பி பணம் கொடுத்தவர்கள், சீட் கிடைக்காவிட்டால் பணமாவது திரும்ப வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டுள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications