தேமுதிக எங்க கூட இருக்காங்க... பாமக வருவாங்க... தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை!!
சென்னை: சட்டசபை தேர்தலில் நல்லதொரு வலுவான கூட்டணியை மக்கள் முன் மாற்று சக்தியாக நிறுத்த வேண்டும் என போராடிக் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தேமுதிக தங்களின் கூட்டணியில் நீடிப்பதாக கூறியுள்ள அவர், பாட்டாளி மக்கள் கட்சியும் பாமக கூட்டணிக்கு வரும் வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகவும், நேரடியகாவும் தொடங்கிவிட்டன. வெள்ள பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் ஜல்லிக்கட்டை வைத்து மல்லுக்கட்ட ஆரம்பித்து விட்டனர் அரசியல் கட்சியினர்.
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தான் போகும் இடமெங்கும் கூறி வருகிறார். இதை வழிமொழிந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இந்து தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமே காங்கிரஸ் கட்சியினர்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த பாஜக தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ள தமிழிசை, எங்கள் எண்ணம் தமிழ் கலாச்சாரமும், பாரம்பரியமும் பேணப்பட வேண்டும் என்பது மட்டுமே. சிலர் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை கோருகின்றனர். ஆனால், விலங்குகளுக்கு எவ்வித தீங்கும் இல்லாமலேயே ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்பதே எங்கள் வாதம் என்று கூறியுள்ளார்.

வலுவான கூட்டணி
சட்டசபை தேர்தலில் நல்லதொரு வலுவான கூட்டணியை மக்கள் முன் மாற்று சக்தியாக நிறுத்த வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறோம். திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அந்த கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் நடத்துவதால் நாங்கள் திணறிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை.

திமுக, அதிமுகவை எதிர்க்கும் கூட்டணி
அரசியலில் யாராக இருந்தாலும் யதார்த்தை புரிந்து நடக்க வேண்டும். எதிர்க்கட்சியை வெற்றி கொள்ளும் அளவுக்கு நமது தளத்தை வலுவானதாக அமைக்க வேண்டும். இதற்கு கூட்டணி அவசியம். பாமக தனித்து போட்டியிடுவதால் எந்த லாபமும் ஏற்படாது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடுக்க வேண்டும் என்றால் வலுவான கூட்டணி மிக மிக அவசியம்.

முதல்வர் வேட்பாளர் யார்?
அரசியல் சூழலும், கூட்டணி கணக்கும் மிகவும் முக்கியம். அரசியல் சூழல் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. இப்போது கூட்டணி கணக்குகளை சரியாக வகுக்க வேண்டும். பாமக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால், நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால் முதலில் வெற்றி பெற வேண்டும் பின்னர் கூட்டணி தொடர்பான மற்ற விஷயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, மீண்டும் வலுவான கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

பாஜகவினர் எம்.எல்.ஏ ஆகவேண்டும்
தேசிய ஜனநாயக கூட்டணியை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஒரு வேளை அது முடியாமல் போனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம். தமிழக சட்டசபையில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உறுப்பினர்களாக பாஜகவினரை அமர வைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

ஆளும் கட்சியுடன் கூட்டணி
ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம். அவர்கள் செய்யும் சில நல்ல காரியங்களை பாராட்டுகிறோம். வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மக்கள் நலனுக்கு மத்திய - மாநில அரசு ஒத்துழைப்பு அவசியம் எனக் கருதினோம். துயர நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியை குறை கூறுவதில்லை. தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறோம். செம்பரம்பாக்கம் விவகாரத்தில் தமிழக அரசை நாங்கள் கடுமையாக சாடியுள்ளோம் என்றும் கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications