காங்கிரஸே மூழ்கிகிட்டு இருக்கு... மொதல்ல அதை காப்பாத்துங்க... ப.சி.க்கு அமைச்சர் ஜெயக்குமார் "சுளீர்
காங்கிரஸே மூழ்கிகிட்டு இருக்கும் நிலையில் அதை முதலில் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியே மூழ்கி கொண்டிருக்கும் நிலையில் ப.சிதம்பரம் அதிமுகவை பற்றி பேசுவதா என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க எடப்பாடி அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

ப.சி. டுவிட்டர் கருத்து
இந்நிலையில் 18 பேரின் தகுதியிழப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் முடிவு பாரபட்சமானது. மைனாரிட்டி தமிழக அரசை காப்பாற்றுவதற்காக எடுத்த முடிவு என்பது அப்பட்டமாக தெரிகிறது. மூழ்கும் கப்பலை எதைச் செய்தாலும் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி
இந்நிலையில் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான இன்றைய வழக்கு குறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், டிடிவி தினகரனும் , மு.க.ஸ்டாலினும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.

நிறைவேறாது
ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்க எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது. 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்கின்றனர் திமுகவினர். ஆனால் அதை சொல்ல அவர்களுக்கு அருகதை இல்லை. திமுக ஆட்சி காலத்தில் பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவை அடித்து அவமானப்படுத்தினர்.

மல்லாக்கப்படுத்துக் கொண்டு
இதை பார்க்கும் போது மல்லாக்கப்படுத்துக் கொண்டு காரி உமிழ்வது போன்று உள்ளது. ஜனநாயக படுகொலைக்கு ஒட்டுமொத்த சொந்தக்காரர்களே திமுகவினர்தான். ஸ்டாலின் சோடா குடித்தால் தினகரன் ஏப்பம் விடுகிறார் என்றார்.

காங்கிரஸ் மூழ்குகிறது
அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என்று ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்புகையில், காங்கிரஸே மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுகவை பற்றி பேச வந்துவிட்டார் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications