நாடாளுமன்றம் முடங்குவதாக வேதனை..கலாமின் இறுதி ஆசையை நிறைவேற்றுவோம்-வெங்கையநாயுடு உறுதி
ராமேஸ்வரம் : நாடாளுமன்றம் முடங்குவதாக அப்துல்கலாம் வேதனை தெரிவித்தது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு அவரது இறுதி ஆசையை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் இறுதியாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, மாணவர்களிடையே மக்களவை முடக்கம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவரது வருத்தம் இனிமேல் நடக்காத அளவுக்கு அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மக்களவையை நடத்துவோம் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
அப்துல் கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கலாமின் பிறந்த வீட்டுக்கு வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
கலாம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் கட்சி வேறுபாடின்றி மதிக்கப்படும் தலைவராக இருந்ததால்தான் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இது போன்று மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவது அனைவரது மனதிலும் அவர் இடம் பெற்றிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. முன்னேற்றப் பாதைக்கே நம்மை கலாம் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மனதில் விதைத்தார்.
அதனால் தான் இவ்வளவு மக்கள் கூடிய கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமின்றி மக்கள் அவர்களாகவே அமைதியான முறையில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். கலாம் அரசியல்வாதியல்ல, நாட்டின் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம், கல்வி வளர்ச்சி என பன்முகத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.
அவரது இறுதி ஆசைப்படி மக்களவையை அமைதியுடன் நடத்த ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications