கனியும் பழங்களும், அழுகி நாறும் தமிழக அரசியலும்!
-ஆர்.மணி
'தேமுதிக தலைவர் விஜயகாந்த் உங்கள் கூட்டணிக்கு வருவாரா?'
'பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது அது நழுவி பாலில் விழும் என்று தெரியாது'!
-விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவாரா என்று ஒரு செய்தியாளர் திமுக தலைவர் கருணாநிதியிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அக் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேள்வி கேட்ட போது கருணாநிதி சொன்ன பதில்தான் இது. அதாவது விஜயகாந்த் தங்களுடன் கூட்டணி சேர அனேகமாக சம்மதம் தெரிவித்து விட்டார், அவரை நாங்கள் கரைத்து விட்டோம். ஆனால எப்போது தனது அதிகாரபூர்வமான பதிலை விஜயகாந்த் அறிவிப்பார் என்று எனக்குத் தெரியாது என்பதைத் தான் பூடகமாக, தனக்கேயுரிய சாதுர்யத்துடனும், வார்த்தை ஜாலங்களுடனும் கருணாநிதி சொல்லியிருக்கிறார்.
இந்தப் பழம் கனிந்து தங்கள் குடத்தில் விழும் என்று ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும், மற்றோர் பக்கம் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியும் வழி மேல் விழி வைத்து, பதை பதைப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் நாளை கழிப்பதும் பாஜகவுக்கு எப்படியோ தெரியாது, ஆனால் நிச்சயம் திமுகவுக்கு கடினமானதாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது.
விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார், யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்பதை அறிய திமுக தலைமை மட்டுமல்ல, எம்எல்ஏ சீட்டு கேட்டு காத்திருப்போரும், அக் கட்சியின் சாமானிய தொண்டனும் கூட பதை பதைப்புடன் தான் நின்று கொண்டிருக்கின்றனர். விஜயகாந்தோ நாள் தோறும் ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுகிறாரோ இல்லையோ அவரது சார்பாக வெளியில் வரும் தகவல்கள் அதுவும் தேசிய ஊடகங்களில் கசிய விடப் படும் செய்திகள் மேலும், மேலும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மார்ச் 8ம் தேதி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்தியாவின் ஒரே தொலைக்காட்சி செய்தி நிறுவனம். இந்த நிறுவனம் 7ம் தேதி பகல் 12 மணியளவில் வெளியிட்ட ஒரு செய்தியில் அன்று மாலையில் மத்திய அமைச்சரும், பாஜக வின் தமிழக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரை, தேமுதிக உயர்மட்ட குழு கூட்டணி தொடர்பாக சந்தித்து பேச இருப்பதாகக் குறிப்பிட்டது. உடனே தேமுதிக பாஜக கூட்டணி பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதென்று செய்திகள் பரவத் தொடங்கின. ஆனால் அன்று மாலையிலேயே ஜவடேகர் அதனை மறுத்து அறிவிப்பு வெளியிட்டு விட்டார். அப்படி எந்த பேச்சும் நடக்கவில்லை என்றும் கூறிவிட்டர்.

இரண்டு நாட்கள் கழித்து மும்பையைத் தலைமையிடமாக கொண்ட ரீடீஃப் ஆங்கில இணைய தளத்தின் டெல்லி செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியில் ஜவடேகர் இப்படி சொன்னதாக செய்தி வந்தது. ‘நேற்று இரவு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா என்னுடன் பேசினார். விஜயகாந்தை முதலமைச்சராக கூட்டணி சார்பாக அறிவிக்க வேண்டும் என்றார். நாங்கள் ஒப்புக் கொண்டு விட்டோம். தேமுதிகவினர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தனர். இப்போது எங்கள் முறை. நாங்கள் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பளராக அறிவிக்க ஒப்புக் கொண்டு விட்டோம்' என்று செய்தி வந்தது.
புதன்கிழமை மாலையிலிருந்து இது தமிழக அரசியிலில் சூட்டைக் கிளப்பியது. ஆனால் சில மணி நேரத்திலேயே ஜவடேகர் இதனை மறுத்து விட்டார். தான் அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லையென்றும் இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்காக அந்த இணையதளத்தின் ஆசிரியருக்கு கடிதம் எழுதப் போவதாகவும், இந்த செய்தியை வெளியிட்ட மற்ற அச்சு ஊடகங்கள் மீது இந்திய பிரஸ் கவுன்சிலிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.
இதுதான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போதான லேட்டஸ்ட் நிலவரம். அதாவது விஜயகாந்த் யாருடம் கூட்டணி சேரப் போகிறார் என்பது பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை. அது திமுகவுடனா அல்லது பாஜகவுடனா என்று குழப்பம் நீடித்துக் கொண்டே போகிறது. நிச்சயமற்றத் தன்மை தொடருகிறது.
ஒரு அரசியல் கட்சி தான் யாருடன் சேரப் போகிறேன் என்பது பற்றி குழப்பத்தில் இருப்பதும், இழு பறி நீடிப்பதும் புதிதல்ல. 2001ம் ஆண்டில் அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் சேரப் போகிறது என்று 32 நாட்கள் குழப்பம் நீடித்தது. தமாக தலைவர் ஜி.கே. மூப்பனார் தொடர்ந்து பல தரப்பினருடனும், பத்திரிகையாளர்கள் உட்பட, ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார். அவருக்கு இருந்த ஒரே சிக்கல் எந்த ஜெயலலிதாவின் ஊழல், அராஜகத்தை எதிர்த்து வெளியே வந்தாரோ அதே ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி சேர வேண்டுமா என்பதுதான். அதே ஜெயலலிதாவுடன் 32 நாட்கள் குழப்பம், இழுபறிக்குப் பின்னர் மூப்பனார் கூட்டணி சேர்ந்தார். இரவு 8 மணிக்கு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்கே போய்த்தான் மூப்பனார் கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
ஆனால் இன்று நடப்பது என்ன? ஒரு பக்கம் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை. இது மறைமுகமாக சில தொழிலதிபர்கள் மூலமாக நடக்கிறது. மறுபுறம் பாஜகவுடன் வெளிப்படையாகவே நடக்கிறது. ஒரு மத்திய அமைச்சர் விஜயகாந்தை அவரது வீடு தேடி வந்து பார்த்து விட்டுச் செல்கிறார். அமைச்சரின் கார் விஜயகாந்தின் தெரு முனையைக் கூடத் தாண்டியிருக்காது, இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறது தேமுதிக வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பு.
அடுத்து தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடைவெளியில் தேமுதிகவுடன் ஜவடேகர் பேச்சு வார்த்தை என்ற செய்தி தேசிய ஊடகங்களில் வெளிவருகிறது. உடனே இதனை ஜவடேகரும், பாஜகவினரும் மறுக்கின்றனர். மறுபுறம் தேமுதிகவுடனான கூட்டணி பற்றிய செய்திக்கு பழம் கனிந்து கொண்டிருக்கிறது, எப்போது பாலில் விழும் என்று தெரியாதென்கிறார் திமுக தலைவர்.
நடந்து கொண்டிருப்பது, பச்சையாகச் சொன்னால் மாடு பிடி அரசியல். கூச்ச நாச்சமில்லாத பேர அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. திமுக, பாஜக என்று இரண்டு தரப்புக்கும் தொடர்ச்சியாக நம்பிக்கையை ஊட்டி, ஆசை வார்த்தைகளை அளந்து, அளந்து பேசி தன்னுடைய பேர வலிமையை விஜயகாந்து அதிகரித்துக் கொண்டே போகிறார். எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்கு அவர் இந்த இழுத்தடிப்பு வேலைகளில் தொடர்ந்து ஈடுபடத்தான் போகிறார். காரணம் விஜயகாந்துக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லையே... தேர்தலுக்கும் இன்னும் இரண்டரை மாதங்கள் இருக்கின்றன.
மனதளவில் தேமுதிக வந்தால்தான் தங்களால் வெல்ல முடியும் என்ற எண்ணத்தை திமுகவினரிடம் கட்சித் தலைமை தனது செயற்பாடுகளால் ஏற்படுத்தி விட்டது. திமுகவில் இன்று எம்எல்ஏ சீட் கேட்டிருப்பவர்கள் அனைவருமே ஒரு வேளை தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வராவிட்டால் நிச்சயம் நொறுங்கித்தான் போவார்கள்.
பாஜகவைப் பொறுத்த வரையிலோ தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவதற்கே கூட அவர்களுக்கு இன்று தேமுதிக வின் தேர்தல் கூட்டணி தேவைப் படுகிறது. எத்தனை எம்எல்ஏ சீட்டுகளை வெல்ல முடியும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். கண்ணியமாக தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவதற்கும், சில தொகுதிகளில் டெபாசிட்களை திரும்ப பெறுவதற்கும் கூட அவர்களுக்கு தேமுதிகவின் கூட்டணி அவசியம்தான்.
ஆகவே இந்த இரண்டு கட்சிகளின் பலவீனங்களை துல்லியமாக உணர்ந்து கொண்ட காரணத்தால்தான் விஜயகாந்த் இன்று இருவரையும் நன்றாக ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். இதில் பாஜக நிலைமை கூட பரவாயில்லை. காரணம் அகில இந்திய தலைமையைப் பொறுத்த வரையில் தமிழகம் அவர்களது வரைபடத்திலேயே இல்லை. இங்கு இழப்பதற்கு பாஜகவுக்கும் எதுவும் இல்லைதான். மோடியைப் பொறுத்த வரையில் அதிமுகவின் 49 எம்.பிக்கள் தான் முக்கியம். அதிலும் குறிப்பாக மாநிலங்களைவையின் 12 எம்.பிக்கள் மிகவும் முக்கியம்.
நாடாளுமன்றத்தில் இது நன்றாக வெளிபட்டது. மொத்த எதிர்கட்சிகளும் குடியரசுத் தலைவரின் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தன. வழக்கமாக இந்த தீர்திருத்தங்கள் ஆளும் கட்சி கேட்டுக் கொண்டவுடன் விலக்கிக் கொள்ளப்படும். ஆனால் கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் எதிர்கட்சிகள் இந்த திருத்தங்களை விலக்கிக் கொள்ள மறுத்து விட்டன. இதனால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எதிர்கட்சிகளுக்கு 94 வாக்குகளும், அரசுக்கு 61 வாக்குகளும் கிடைத்தன. கடந்தாண்டும் இதே போன்றுதான் நடந்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது ஐந்தாவது முறையாகும். அதாவது குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்கட்சிகளின் திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதில் அரசு தோற்பது இது ஐந்தாவது முறையாகும். இந்த வாக்கெடுப்பில் அதிமுகவின் 12 எம் பிக்களும் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தான் குறிப்பிடத்தக்கது.
ஆகவே பாஜகவைப் பொறுத்த வரையில் மத்திய தலைமை தமிழகத்தை கண்டு கொள்வதே இல்லை. இங்குள்ள பாஜக தலைவர்களோ வானத்தையே வில்லாக வளைத்து விடுவதைப் போல பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பழம்பெரும் திராவிடக் கட்சியின் நிலைமைதான் அந்தோ பரிதாபமாக இருக்கிறது. கருணாநிதி வெளிப்படையாகவே தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்த பிறகும் தொடர்ச்சியாக விஜயகாந்த் பாஜக தலைவர்களை வீட்டிற்கு அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதுவே பழைய கருணாநிதியாக இருந்தால் என்றோ தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையை முறித்திருப்பார்.
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களுக்கு சில மாதங்கள் முன்பு வரையில் அன்றைய என்.டி.ஏவில் தமிழகத்தில் மதிமுகவும் இருந்தது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் திமுக வுக்கும் ஒரு பெரிய அரசியல் உரசல் இருந்தது. திடீரென்று ஒரு நாள், 2001ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘என்டிஏவில் வைகோவுக்கு இடமில்லை' என்று கூறி மதிமுகவை வெளியேற்றினார்.
ஆனால் இன்று தினமும் ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கும் விஜயகாந்த்துக்காக வாய் மூடி மெளனியாக காத்துக் கொண்டிருக்கிறார். பழம் கனிந்து விட்டது என்கிறார்.ஒரு வேளை இந்தப் பழம் கனிந்து திமுக என்கின்ற பால் குடத்தில் விழுந்தால் கூட இது அழுகி, நாற்றமெடுத்துப் போன பழம் தான் என்பது இந்தியாவின் முதிர்ந்த அரசியல் வாதிக்கு தெரியுமா என்பது நமக்குத் தெரியவில்லை.
இன்றைக்கு விஜயகாந்தின் ஒவ்வோர் சொல்லும், செயலும் எந்தளவுக்கு மக்கள் மன்றத்தில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பது பதவியை எப்பாடு பட்டாவது பிடித்து விட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் மதி மயங்கி கிறங்கிக் கிடக்கும் திமுகவுக்கு தெரிய வாய்ப்பில்லைதான். காரணம் 2011 மற்றும் 2014 தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்திருக்கும் திமுக எப்பாடுபட்டாவது இந்த முறை வெற்றியை சுவைத்துப் பார்க்க அல்லாடிக் கொண்டிருக்கிறது. பெருங் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறது.
விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. அவர் எந்த நேரமும் திமுக பக்கம் வரலாம். அல்லது இந்த இழுபறி நீடித்துக் கொண்டே போய் சில நாட்கள் கழித்து திமுக பக்கம் வரலாம். அல்லது பாஜகவுடனும் போகலாம். அது முக்கியமல்ல. ஒரு வேளை திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தாலும் கூட, ஏற்கனவே மக்கள் மன்றத்தில் தன்னுடைய நடவடிக்கைகளால் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவரை, தேர்தல் பிரச்சாரக் காலங்களில், வாக்குத் தினம் வரையிலும் கூட திமுகவால் எப்படிச் சமாளிக்க முடியும் என்பது சுவாரஸ்யமான விவகாரம்தான்.
அரசியல் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் புதிய கீழ் நிலையை தமிழகம் இன்று அனு தினமும் கண்டு கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட போது கருணாநிதிக்கு வயது 24. காந்தியின் அரசியலைக் கண்ட, 1952ல் நிகழ்ந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் முதல் 2014 தேர்தல் வரையில் கண்ட, அனேகமாக, இந்தியாவில் இன்று உயிருடன் உள்ள அரசியல் தலைவர்களில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் கருணாநிதி. இந்த 91 வயது தலைவர் இன்று யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்? தான் என்ன பேசுகிறோம் என்பதையே தெரியாமல், நிலை மறந்து பேசிக் கொண்டிருக்கும் ஒருவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது அந்த தலைவருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் காலம் கொடுத்த தண்டனைதான். இது ஒரு வகையில் ஒட்டு மொத்த தமிழகத்துக்குமான தண்டனையாகவே மாறிப் போனது காலத்தின் கோலம் தான்.
2011 ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தன்னுடைய பிறந்த நாளின் போது, அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் அவர் ஆட்சியை ஜெயலலிதாவிடம் பறிகொடுத்திருந்தார் - கருணாநிதி கூறினார் - ‘கூடா நட்பு கேடாய் முடியும்' இது காங்கிரஸ் உறவைப் பற்றி அவர் சொன்னதாக அப்போது வியாக்கியானம் செய்யப்பட்டது. இன்று மற்றோர் கூடா நட்புக்காக அவரும் அவரது கட்சியும் காத்துக் கிடக்கிறார்களா என்ற கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications