For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுக: திருமாவளவன் கோரிக்கை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அந்த மதுக் கடையால் அப்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தலித் மக்களும் மீனவ மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Pattinappakkam tasmac shop closed immediately - thirumavalavan

மாலை நேரங்களில் அக்கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவதால் காவல்துறையினரே முன்னின்று மது குடிப்போரை நீண்ட வரிசையில் ஒழுங்குபடுத்திக் குடிக்க வைக்கும் அவலநிலையில், குடிகாரர்கள் நடுவீதிகளிலும் அங்குள்ள கடற்கரை மணற்பகுதிகளிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

அதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பெரும் அச்சத்துடனேயே நடமாடவேண்டிய நிலை நிலவுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் மாலை நேரங்களில் தனியாக வீடு திரும்புவதற்கு அச்சப்படுகின்றனர். ஏற்கெனவே, குடிபோதையில் இரண்டு படுகொலைகளும் அங்கே நடந்துள்ளன.

எனவே, அம்மதுக்கடையை அப்புறப்படுத்தக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்திய பிறகும் செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல தமிழக அரசு கண்டும் காணாமல் நடந்துகொள்கிறது.

குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த வழக்குகளும் அங்கு உண்டு. மேலும், மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணமடைந்தபோது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தியபோது பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த பெண்கள் குறிப்பிட்ட அம்மதுக்கடையை முற்றுகையிட்டு மது பாட்டில்களை உடைத்து அப்புறப்படுத்தி போராட்டம் நடத்தினர்.

அந்தக் காட்சி அப்போது அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றது. அந்த அளவிற்கு அப்பகுதி மக்களுக்குப் பெரும் துயரத்தை விளைவிக்கக்கூடிய அம்மதுக்கடையை அப்புறப்படுத்தாமல் தமிழக அரசு பிடிவாதம் பிடிப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்ட ஒருவனை, நந்தினி என்பவர் தனது தோழியுடன் விரட்டிச்செல்லும்போது அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் நடுச்சாலையில் குடிபோதையில் நிறையபேர் நடமாடியதால் நிலைதடுமாறி அதனால் நந்தினி மரணமடைய நேரிட்டது.

ஆகவே, இரண்டு படுகொலைகளுக்கும், இரண்டு விபத்து மரணங்களுக்கும் காரணமாக இருந்த அம்மதுக்கடையை பொதுமக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு செவிசாய்க்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
Pattinappakkam tasmac shop closed immediately, says VCk chief thol.thirumavalavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X